×

நீட் தேர்வு ரத்து விவகாரம் பற்றி 17ம் தேதி தமிழக எம்பி.க்கள் குழு அமித்ஷாவை சந்திக்கிறது

புதுடெல்லி: தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக வரும் 17ம் தேதி மாலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம் தமிழக ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு விரைவாக அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், டெல்லியில் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்பி.க்கள் குழு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் மனுவை கடந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் வழங்கினர். அதேபோல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் மனு கொடுக்க இக்குழு 3 முறை முயற்சி செய்தது. ஆனால், உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட முக்கிய பணிகளில் இருப்பதாக கூறி, தமிழக குழுவை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கவில்லை. இந்நிலையில், வரும் 17ம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழக எம்பி.க்கள் குழுவை சந்திக்க, அமித்ஷா நேரம் ஒதுக்கியுள்ளார். அப்போது, டிஆர்.பாலு தலைமையில், அதிமுக. எம்பி நவநீத கிருஷ்ணன், காங்கிரசின்  ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இடதுசாரிகள் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், செல்வராஜ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்பி நவாஸ்கனி ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.

Tags : Tamil Nadu ,Amit Shah , A group of Tamil Nadu MPs will meet Amit Shah on the 17th on the issue of cancellation of NEET exam
× RELATED தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா!