முன்கள பணியாளர் என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் செலுத்தினார்

சென்னை: முன்கள பணியாளர் என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு பணியின் ஒரு கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர் டோஸ்) கோவிட் தடுப்பூசி திட்டத்தை சென்னை எம்.ஆர்.சி. நகரில்  நேற்று முன்தினம் முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 79 லட்சத்து 84 ஆயிரத்து 156 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 15 முதல் 18 வயதுள்ள 23 லட்சத்து 34 ஆயிரத்து 845 மாணவ, மாணவிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலினும், முன்கள பணியாளர் என்ற முறையில் நேற்று (11ம் தேதி) முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசியை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். இதுகுறித்து, தனது டிவிட்டர் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: “நான் முன்கள பணியாளர் என்ற முறையில் இன்று (நேற்று) முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டேன்.அனைத்து முன்கள பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தை கொண்டு நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்” என்று கூறியுள்ளார்.

Related Stories: