×

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றில் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடாக 84 இடங்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால் அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, மொத்த இடங்களில் தான் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமே தவிர மண்டல வாரியாக வழங்கக்கூடாது என்றும் தாங்கள் பெண்களுக்கு வழங்குவதை எதிர்க்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் சென்னையை பொறுத்தவரை மத்திய பகுதியில் தான் பெண்கள் அதிகம் என்றும் புறநகர் பகுதிகளில் குறைவு என்பதால் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் விதிகளுக்கு உட்பட்டு மண்டல வாரியாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார். பெண்களுக்கு வழங்குவதை மனுதாரர் ஏற்கவில்லை என்பதால் 50 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என்றும் ஆனால் அது மொத்த வார்டுகளில் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.


Tags : Chennai Municipality , Chennai Corporation, Women, 50% quota, iCourt
× RELATED மக்களவைத் தேர்தலையோட்டி காவலர்கள்...