ராணிப்பேட்டை நவ்லாக் பண்ணை தொழிலாளர்களுக்கு 4 மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்-விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை நவ்லாக் பண்ணை தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத சம்பளத்தை வழங்க வேண்டும், என்று மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். அதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா பெயர் மாற்றம், சொத்து பிரச்னை, உதவித்தொகை கோருதல், சுயதொழில் கடனுதவி வேண்டுதல் போன்ற மனுக்களை அளித்து வருகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது துறை அலுவலர்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக மக்கள் குறைதீர்வு கூட்டம் உட்பட அனைத்து கூட்டங்களும் நேரடியாக மனு அளிக்க ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் பொதுமக்கள் மனு அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மனு பெட்டி நேற்று வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கும் விதமாக போலீசார் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.அதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை நவ்லாக் பண்ணையில் அரசு தென்னை வீரிய ஒட்டு விதைப்பண்ணை, ஆதார விதைப்பண்ணை, தோட்டக்கலை விதைப்பண்ணை ஆகியவை இயங்கி வருகின்றன. இதில், தென்னை வீரிய பண்ணை மற்றும் ஆதார விதைப்பண்ணை ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

எனவே, நிலுவையில் உள்ள 4 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரியர்ஸ் பணம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்கப்பட்ட பொங்கல் போனஸை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

கலெக்டர் அலுவலகத்திற்கு கூட்டமாக வர தடை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டும் மனு அளிக்க வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் அளிக்கும்  மனுக்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் மூலமாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: