×

பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை-கவர்னர் தமிழிசை தகவல்

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கோவிட் மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில் தலைமை செயலர் அஷ்வனி குமார், ஏடிஜிபி ஆனந்த மோகன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் ராமலு, கோவிட் தலைமை அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி சாயிரா பானு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை இயக்குனர், புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.
 இந்த கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:

 மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு பின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம். அதனால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

 வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிகாரிகள் எந்த நேரமும் ஆய்வு செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை என்றாலும் காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். இனி தடுப்பூசி தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு சென்றுதான் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

 அவசியம் மற்றும் அவசர காரணங்களுக்காக மட்டும் மக்கள் மருத்துவமனைகளுக்கு வரலாம். அவசியமில்லாத நிலையில் இணைய வழியாக ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக முறையான முன்பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் தடுப்பூசி போடுவதும் அதற்கான ஆவணத்தை வைத்துக்கொள்வதும் அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத் துறையும் மற்ற அரசு துறைகளும் இணைந்து சூழ்நிலையை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Pongal ,Governor , Puducherry: An emergency meeting of the Govt Management Committee was held at the Governor's House yesterday in the wake of the rising incidence of corona infection in Puducherry.
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா