×

பொங்கல் பண்டிகையை கொண்டாட பனியன் தொழிலாளர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை-சொந்த ஊருக்கு செல்ல உற்சாகம்

திருப்பூர் :  பொங்கல் பண்டிகை கொண்டாட திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது.திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனியன் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் நடைபெறுகிறது. இதில் பணியாற்ற வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள்  தங்கி பணியாற்றி வருகின்றனர்.

 ஓய்வின்றி பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். வரும் 13 ம் தேதி போகிப்பண்டிகை, 14 ம் தேதி பொங்கல் பண்டிகை, 15 ம் தேதி மாட்டுப்பொங்கல், 16 ம் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆர்டர்களை விரைந்து முடிக்க தொழில் துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தொழிலாளர்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படுகிறது. பின்னர் 17, 18 ஆகிய தேதிகளில் பஞ்சு நூல் விலை உயர்வை கண்டித்து தொழில் துறையினர் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதனால் பொங்கல் விடுமுறையோடு சேர்த்து தொழிலாளர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.இதனால் திருப்பூர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினர், உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Tags : Pongal , Tiruppur: Tirupur Banyan Company workers are on holiday for 5 consecutive days to celebrate Pongal.
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா