×

டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க தனியார் அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவு

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க தனியார் அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணி சார்ந்த தனியார் அலுவலகங்கள் மட்டும் செயல்படலாம் என்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அதிகமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது. இதன் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க தனியார் அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 19,166 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் டெல்லியை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவற்றை மூடி நேற்றைய தினம் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனுடைய திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி தற்போது விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய தனியார் நிறுவனங்களை தவிர அனைத்து தனியார் நிறுவனங்களும் தற்போது முழுமையாக மூடிவிட்டு தங்களுடைய பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், பார்கள் மறு உத்தரவு வரை தொடர்ச்சியாக மூடி இருக்க வேண்டும். உணவகங்களை பொறுத்தவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடு, வெளியூர் பயணம் செய்வோர், விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு செல்வோர் உரிய டிக்கெட்டை காண்பித்து அவர்கள் தங்களுடைய பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்த பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் பொறுத்தவரை பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர். டெல்லியை பொறுத்தவரை கொரோனா தொற்று மூன்றாவது அலை காரணமாக உச்சத்தை எட்டி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது வரை கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் முழு ஊரடங்கிற்கு தற்போது அவசியமில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அது 20ஆக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு செல்வோரும் உரிய மருத்துவ சீட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது அதிக அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi , delhi, corona
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு