×

மூன்று சக்கர வாகனம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா

தர்மபுரி : தர்மபுரியில் இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி முதியவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், மாரவாடி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(62). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு, ஊன்றுகோலுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில், தரையில் அமர்ந்து கையில் கோரிக்கை அட்டையை ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாகியும், அவர் தர்ணாவை கைவிட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அவரிடம் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதுபற்றி இளங்கோவன் கூறுகையில், ‘எனக்கு சர்க்கரை நோய் காரணமாக கடந்த 4 ஆண்டுக்கு முன்பு, ஒரு கால் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதற்கு சிரமமாக இருப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச 3 சக்கர மோட்டார் சைக்கிள் கேட்டு, பலமுறை மனு கொடுத்துள்ளேன். ஆனால், அதிகாரிகளோ ஒரு கால் பாதிப்பிற்கு மோட்டார் சைக்கிள் வழங்க விதியில் இடமில்லை என கூறி வருகின்றனர். எனவே, எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பு கவனம் செலுத்தி 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டும்,’ என்றார்.

Tags : Tarna , Dharmapuri: A disabled old man was involved in a scuffle at the Collector's office in Dharmapuri demanding a free three-wheeler.
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...