கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 540 கடைகளுக்கு அபராதம், சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா பகுதியிலும் முழு ஊரடங்கை முன்னிட்டு வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் மூலம் ஆய்வு செய்யப்பட்டு ஊரடங்கில் கடைகளை திறந்து வியாபாரம் செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் தனி வட்டாட்சியர் மணிகண்டன், ஒன்றிய பொறியாளர் சாமிதுரை, கிராம நிர்வாக அலுவலர் எழில், உதவியாளர் அண்ணாமலை ஆகியோர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில் தெரு பகுதியில் தகரசெட்டிலான கடை ஒன்றை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டதை கோட்டாட்சியர் கண்டறிந்து ரூ.200 அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தார். மேலும் 2 கடைகளுக்கும் தலா ரூ.200 அபராதம் விதித்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜய்பிரபாகரன் தலைமையில் 4 குழு அமைத்து அதிரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, 3 பெட்டி கடைகளுக்கு ரூ.600 அபராதம் விதித்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்தினி தலைமையில் திருகோவிலூர் பகுதியில் ஆய்வு செய்ததில், 5 பெட்டிகடைகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் தலைமையில் ஆய்வு நடத்தி ரூ.1,900 அபராதம் விதிக்கப்பட்டது. சின்னசேலம் வட்டாட்சியர் அனந்தசைனன் தலைமையில் ஆய்வு நடத்தி ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது. கல்வராயன்மலை வட்டாட்சியர் அசோக் தலைமையில் ஆய்வு செய்து ரூ.400 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் அந்தந்த பகுதியில் ஆய்வு நடத்தி விதிமுறை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தனித்தனியாக ஆய்வு செய்து 540 கடைகளுக்கு அபராதம் விதித்து அத்தொகையை வசூல் செய்தனர். ஒருநாள் ஊரடங்கை பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஊரடங்கினை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: