அணைக்கட்டு ஒன்றியத்தில் மலைகிராமங்களுக்கு செல்லும் கரடுமுரடான சாலைகள் சீரமைக்கப்படும்-ஆய்வு செய்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தகவல்

அணைக்கட்டு :  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட மலை ஊராட்சிகள் உள்ளன. இதில் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த மலை கிராமங்களுக்கு செல்லு சாலை கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் சேதமானது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்தான்கொல்லை பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த ஊராட்சி மன்ற தலைவர் தற்காலிகமாக பாதையை சீரமைத்துள்ளனர்.

இதை பார்த்த வனத்துறையினர் எங்கள் கட்டுபாட்டில் உள்ள வனதுறை சாலையில் நீங்கள் சீர் செய்ய கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் கணபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மலை கிராமங்களுக்கு சென்றனர். கார்கள் செல்ல கூடிய அளவுக்கு வழியில்லாததால் அவர்கள் நடந்தே மலை கிராமங்களுக்கு சென்று, மலை கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது, நாங்கள் சென்று வரும் பாதை மிகவும் மேசாமாக இருப்பதால் சென்று வர, மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்,  தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்க முயன்றால் வனத்துறையினர் தடுக்கின்றனர், ஜார்தான்கொல்லை ஊராட்சியில் தற்காலிகமாக பாதை சீரமைத்தது குறித்து தெரிவிக்காததால் அந்த பகுதி வன துறையினரை டிரான்ஸ்பர் செய்து விட்டனர்.

சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், தற்காலிகமாக சென்று வர மண் கொட்டி சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு பேசுகையில், ‘அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை மலைக்கு வரும் சாலை தார்சாலையாக மாற்ற நடவடிக்க எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அதிகாரிகளிடம் எம்எல்ஏ பேசி வருகிறார்.

வன துறையின் அனுமதியோடு மலை கிராமங்களுக்கு செல்லும் பாதை தற்காலிகமாக சீரமைக்கப்படும் என்றார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: