×

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக வழக்கு : ஒன்றிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை: மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி  ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை தொகுதி திமுக எம்பி எஸ்.ராமலிங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மழை வெள்ள நேரத்தில் அணைகள் நிரம்பி சேதம் ஏற்படும்போது அதை நிர்வாகம் செய்வது மாநில அரசின் செயலாகும். மாநிலங்களில் உள்ள அணைகளை பாதுகாப்பது, பராமரிப்பது மாநில அரசுகளின் கடமை. அந்த அணைகள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே சொந்தமானது. கேரளாவுக்கு அதிக காய்கனிகளை சப்ளை செய்வது தமிழகம்தான்.

பருத்தி போன்ற வணிக பொருட்களின் உற்பத்தியும் தமிழகத்தில் அதிகம். மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்வை ஒழுங்குபடுத்தி மேம்படுத்துவது ஒன்றிய அரசின் கடமையாகும். இந்நிலையில் ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில்  நிறைவேற்றியது.சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் ஒன்றிய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

எனவே, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் ஆஜராகி, மத்திய அரசின் இந்த சட்டம் மாநில அரசின் அதிகாரத்தை பரிக்கும் வகையிலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், மனு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதனை அடுத்து மனு தொடர்பாக மத்திய அரசு மூன்று வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags : Pimuha ,EU government , திமுக எம்பி ராமலிங்கம்,அணைகள் பாதுகாப்பு
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...