சபரிமலை எருமேலி வாவர் கோயிலில் சந்தனக்கூடு திருவிழா!: இஸ்லாமியர்களுடன் இணைந்து கொண்டாடிய ஐயப்ப பக்தர்கள்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள எருமேலியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் இஸ்லாமியர்களுடன் ஐயப்ப பக்தர்களும் கலந்துகொண்டனர். மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14ம் தேதியன்று மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் எருமேலியில் உள்ள சாஸ்தா கோவிலில் பேட்டை துள்ளல் வழிபாடு நடத்துவது பாரம்பரிய வழக்கம். அதேபோல அங்குள்ள வாவர் சுவாமி கோவிலில் முதற்கட்டமாக சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட யானையில் செண்டை மேளம் முழங்க வாவர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சாஸ்தா கோவில் நோக்கி சென்றது.

சாஸ்தா கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில், அங்கு காத்திருந்த ஐயப்ப பக்தர்கள், சந்தனக்கூடு நடத்தி வந்த இஸ்லாமியர்களை ஆரத்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர். அங்கு செண்டை மேளம் முழங்க வழிபாடும் நடைபெற்றது. எருமேலியில் மண்டல சீசன் துவக்கம் முதல் பேட்டை துள்ளல் நடந்தாலும் மகரஜோதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக நடக்கும் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. அம்பலக்குழா, ஆலங்காடு என இரண்டு பக்தர்கள் குழுவினர் நடத்தும் பேட்டை துள்ளலுக்கு பின் இங்கு பேட்டை துள்ளல் இருக்காது. இதையொட்டி இன்று காலை சுமார் 11 மணியளவில் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெறவுள்ளது.

Related Stories: