×

அமெரிக்காவில் மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்ட பன்றியின் இதயம்

பால்டிமோர்: இதயம் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிவிட்ட நபருக்கு பன்றியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இதயம் பொருத்தப்பட்டு புது வாழ்வு தரப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மேரிலேண்டை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். வேறு இதயத்தை பொருத்தவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார். இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதனையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.

இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதல் முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது. இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்திருப்பதால் சிறுநீரகம் போன்ற மற்ற பன்றியின் உறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும். உலகம் முழுவதும் உறுப்பு தானத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

Tags : United States , Heart
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்