சாய்னா நேவால் குறித்து ஆபாச கருத்து.. நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் போலீசுக்கு பரிந்துரை

சென்னை : பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் டிவிட்டரில் வெளியிட்ட ஆபாச பதிவு சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

  அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வீண் விவாதங்களை ஏற்படுத்த நடிகர் சித்தார்த் முயன்று வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலிவுட்டில் கங்கனா ரனாவத், ராம்கோபால் வர்மா ஆகியோர் இதுபோல் எந்த ஒரு பிரச்னையிலும் மூக்கை நுழைத்து தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் சர்ச் சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். அதே பாணியில், நடிகர் சித்தார்த்தும் நீண்ட காலமாக இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.  சமீபத்தில் சாய்னா நேவாலை ஆபாச வார்த்தையில் அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி  உள்ளது.

பஞ்சாப்பில் பிரதமர் மோடி பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டிவிட்டர் பதிவில், ‘நாட்டின்  பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்’என்று கூறியிருந்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த் பதில் டிவிட் போட்டார். அவரது வார்த்தைகள் ஆபாசமாக அர்த்தம் கொள்ளும்படியாக இருந்ததால் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். சித்தார்த் குறிப்பிட்ட வார்த்தைகள் ெபண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவர்கள் சித்தார்த்தை கடுமையாக கண்டித்துள்ளனர். ‘ஆபாச கருத்துக்களை கொண்ட படமான பாய்ஸ் படத்தில் நடித்தவர் சித்தார்த். மேலும் பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார். சில நடிகைகளை காதலித்தும் ஏமாற்றி உள்ளார். தனது படங்கள் ஓடாததால், இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார். சமந்தா விவாகரத்து விஷயத்திலும் இதே போல் மூக்கை நுழைத்து தேவையில்லாமல் அவரை இழிவுபடுத்தினார். பெண் விரோத செயல்களில் தொடர்ந்து சித்தார்த் ஈடுபட்டு வருகிறார்’ என பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த விஷயத்தில் தேசிய மகளிர் ஆணையமும் தலையிட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்து நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சித்தார்த்தின் டிவிட்டர் கணக்கை முடக்குமாறு டிவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கடிதங்களின் நகல்கள், அந்த ஆணையத்தின் டிவிட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளன.

Related Stories: