×

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்; வந்த 30 நிமிடத்திற்குள் போலீஸ் அதிகாரி சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2021ன் கீழ் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு உணர்ச்சிகரமான நிலையில் உள்ளவர்களை முழு ஈடுபாட்டுடன் புலன் விசாரணை செய்யும் முறையினை எளிதாக்குவதற்கு தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சமூக நல பாதுகாப்பு துறையின் மூலம் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையம் மூலமாக மனநல ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
*  பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும்.
*  பாதிக்கப்பட்ட குழந்தையின் சொந்தங்கள், உறவினர்களால் பாலியல் குற்றங்கள் நடந்தால், உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
*  குடும்ப உறுப்பினர்களால் குழந்தைக்கு பாலியல் தொல்லை நடந்திருக்குமெனில் அந்த குழந்தையை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உடனடியாக விசாரணை அதிகாரி பாதுகாப்பாக மீட்க வேண்டும்.
*  இவ்வாறாக குற்றங்களில் காவல் துறையின் உடனடி தலையீடு தேவைப்படும் பட்சத்தில் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து ஒரு பெண் காவல்துறை அதிகாரி உடனடியாக செல்ல வேண்டும்.
* புகார் பெற்றவுடன் விசாரணை அதிகாரி உடனடியாக 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு அல்லது பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவரை மீட்டு அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி இருந்தால் தேவைப்பட்டால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கான வழிமுறைகளை தாமதிக்காமல் செய்திடல் வேண்டும்.
* குழந்தைக்கு பாதுகாப்பான வசதியான இடத்தில் புகார் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
*  விசாரிக்கப்பட வேண்டிய இடமானது காவல் நிலையத்தில் இருந்து வெளியில் இருந்தால் குழந்தையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இடம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையின் போது சந்தேக நபரோ அல்லது சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்களோ இருக்க கூடாது.
*  அனைத்து மகளிர் காவல்  நிலையத்தின் புலன் விசாரணை அதிகாரி பாதிக்கப்பட்ட குழந்தையை அவரது வீட்டில் விசாரணை செய்து அறிக்கை பதிவு செய்ய செல்லும் சமயத்தில் வாகனத்தின் சைரனை பயன்படுத்த கூடாது.
*  குழந்தையுடன் பழகும் போது அதிகாரிகள் சாதாரண உடையில் இருக்க வேண்டும்.
*  புலன் விசாரணை அதிகாரிகள் பெற்றோர், பாதுகாவலர் அல்லது குழந்தையுடன் கலந்துரையாடும் போது ஆலோசகர்கள் உடனிருக்க வேண்டும்.
*  குற்றத்தை பற்றிய தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் ஒரு முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது புகார்தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Tags : DGP ,Silenthrababu , Sexual harassment complaints against children; Police officer should go to the spot within 30 minutes of arrival: DGP Silenthrababu orders
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...