முகூர்த்தக்கால் நடப்பட்டது; ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லூர் தயார்; வரும் 16ம் தேதி நடக்கிறது: முதல்வருக்கு மக்கள் நன்றி

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே முத்தாலம்மன் கோயில் முன்பு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

பின்னர் விழாக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 16ம் தேதி நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள், பார்வையாளர்கள் அனுமதி போன்றவை தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்கும். பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம், விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள்  வழங்கப்பட உள்ளன. பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை விழாக்குழுவினர் முன்னின்று செய்து வருகிறோம்.

வெளியூர் மற்றும் வெளிமாவட்ட காளைகளுக்கு அனுமதி கிடையாது. உள்ளூர் பகுதிகளில் வளர்க்கப்படும்  காளைகளை ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தேவையான வழிமுறைகளை அரசின் அனுமதியோடு செய்ய உள்ளோம். நோய் தொற்று பரிசோதனைகளும் நடத்தப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் அந்தந்த பகுதியில் பதிவுகள் நடைபெற உள்ளது. வழக்கமான பார்வையாளர் பிரமாண்ட மேடையை தவிர்த்து,  குறைந்த அளவு பார்வையாளர் ஜல்லிக்கட்டு நிகழ்வினை பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

நீதிமன்ற வழிகாட்டுதல்படி இரண்டடுக்கு தடுப்பு வேலி, விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை  உள்ளிட்ட அனைத்து பணிகளும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, பொதுப்பணித்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளோடு ஆலோசித்து ஏற்பாடு செய்யப்படும். இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா, நடைபெறாதா என்று பல்வேறு சந்தேக கேள்விகளுக்கு மத்தியில், நமது பாரம்பரியத்தை காத்து, ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.

*அவனியாபுரத்தில் மாநகராட்சியே நடத்தும்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் வரும் 14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பி.மூர்த்தி பின்னர் அளித்த பேட்டியில், ‘‘அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் கமிட்டி அமைப்பதில் பிரச்னை இருப்பதால், ஒன்று சேர்ந்து வந்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை வராததால், இம்முறை மதுரை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: