×

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை; மருத்துவமனையில் அனுமதிப்போர் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கலாம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

புதுடெல்லி: ‘கொரோனா பாதிக்கப்படுவோரில் 5-10 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை விரைவில் மாறக்கூடும்’ என மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமிக்ரான் புதுவகை வைரசால் இந்தியாவில் கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தினசரி தொற்று 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என ஒன்றிய அரசு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், மாநில அரசுகளுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதற்கு ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ்களே காரணம். எனவே தற்போதைய சூழலை நிர்வகிக்க சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போதைய சூழலில் கொரோனா பாதிக்கப்படுவோரில் 5-10 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதுவே 2வது அலை எழுச்சியின் போது 20-23 சதவீதம் பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. எனவே, அதுபோன்ற நிலை விரைவில் ஏற்படக்  கூடும். அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

எனவே, அனைத்து மாநிலங்களும் கொரோனா பாதித்தோர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஆக்சிஜன், ஐசியு படுக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றை தினசரி அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். தேவையான சுகாதாரப் பணியாளர்களை நியமித்தல், சுகாதார வசதிகள் செய்யப்படுவதை கடந்த அலையின் போது செய்ததைத் போல தினசரி ஆய்வு செய்ய வேண்டும். பல்வேறு மாநிலங்கள் தற்காலிக மருத்துவமனைகளை தயார்நிலையில் வைத்தள்ளன.

ஓய்வுபெற்ற மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ மாணவர்களை கொரோனா குறித்து தகவல்களை அளிக்கும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டு தனிமையில் இருப்பவர்களை தேவைப்படும் சமயத்தில் கொரோனா சிறப்பு மையங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு மாற்ற கூடுதல் ஆம்புலன்ஸ்கள் அல்லது தனியார் வாகன வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பாதிப்பு 1.79 லட்சம்; சிகிச்சை 7.2 லட்சம்

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 723 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த தொற்று எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727.
* கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் பலியாகி உள்ளனர். மொத்த கொரோனா பலி 4 லட்சத்து 83 ஆயிரத்து 936.
* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

ஒமிக்ரான் 4 ஆயிரம்: நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை 1,552 பேர் குணமடைந்துள்ளனர்.

இரவு 10 மணி வரை தடுப்பூசி மையங்கள்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி மையங்களை இயக்குவதற்கு எந்த நேரக்கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என ஒன்றிய அரசு நேற்று தெளிவுபடுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதார துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னனி அனுப்பிய கடிதத்தில், ‘கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு எந்த நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எனவே தேவையை பொறுத்து மாநில அரசுகளே நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம். கூடுதல் பணியாளர்களை நியமித்து தடுப்பூசி போடும் நேரத்தை நீட்டிக்க வேண்டும். அந்த மாநிலங்களில் உள்ள சுகாதார பணியாளர்கள், மையங்களில் வசதியை பொறுத்து இரவு 10 மணி வரையிலும் தடுப்பூசி மையங்களை செயல்படுத்தலாம்’ என கூறப்பட்டுள்ளது.

டெல்டாவை ஒமிக்ரான் மிஞ்சும்: தற்போது ஒமிக்ரானை விட டெல்டா வகை வைரஸ் தொற்றே இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. ஆனால் விரைவில் டெல்டாவை இடத்தை ஒமிக்ரான் பிடிக்கும் என வைரஸ் மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். அசல் ஒமிக்ரான் வகை (பி.1.1.529) தற்போது 3 புதிய மாற்றங்களை உருவாக்கி உள்ளது. அவை பிஏ1, பிஏ2, பிஏ3 என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பிஏ1 வேகமாக பரவி வருகிறது. கூடிய விரைவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஒமிக்ரான் துணை வகை வைரஸ்கள் டெல்டாவை மிஞ்சி அதிகளவில் அதிகரிக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

யாருக்கு பரிசோதனை தேவையில்லை?: தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என ஐசிஎம்ஆர் ஆலோசனை குழு புதிய பரிந்துரை வெளியிட்டுள்ளது. தொடர்பில் இருந்தவர்கள் முதியவர்கள் அல்லது இணை நோய் உள்ள அதிக பாதிப்புக்கு சாத்தியமான நபர்களாக இருந்தால் மட்டும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : U.S. government , U.S. government warning to states; The number of hospital admissions may increase rapidly: Instruction to intensify monitoring
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...