ஒமிக்ரான் புதிய வகை கோவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி

சென்னை: ஒமிக்ரான் என்னும் புதிய வகை கோவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில் பதிவுத்துறை அலுவலகத்தில்  கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கை: பதிவு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வரையறுத்து தரப்பட்டும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு நடைமுறையின் போது மக்கள் கூட்டமாக இருக்கும் நிலை பதிவுத்துறை தலைவர் அறையில் அமைக்கப்பட்டுள்ள காணொளி வழி கண்காணிக்கப்படும் போது தெரியவருகிறது.

தற்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை தொற்று பரவுவதாக அரசால் அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் எந்த ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் நிலை ஏற்படாவண்ணம் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. ஆவணப்பதிவு மற்றும் திருமணப்பதிவிற்கு மட்டும் பொதுமக்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்கவும், பிற சேவைகள் அனைத்தும் ஆன்லைன் வழி வழங்கப்படுவதை தெரிவித்து உடனடியாக திருப்பி அனுப்பிவைக்க வேண்டும். முன்பு தெரிவித்தபடி அலுவலக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் வாஷ் பேசின் அருகே சோப்பு தண்ணீர், சானிட்டைசர் வைத்து பதிவுக்கு வரும் பொதுமக்கள் அதனை பயன்படுத்திய பின்னர் அலுவலகத்திற்குள் நுழைவதை கண்காணிக்க வேண்டும்.

போதுமான தனிமனித இடைவெளியை அலுவலகத்தில் கடைபிடிக்கும் வண்ணம் அலுவலக வளாகத்தில் வட்டமிட்டு வைக்க வேண்டும், அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் முறையாக அணிவதுடன் பொதுமக்கள் முகக்கவசம் முறையாக அணிவதை உறுதி செய்த பின்னரே அலுவலகத்தினுள் அனுமதிக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு நிலையிலும் ஆவண மேலெழுத்துச்சான்றிற்காக எடுக்கப்படும் புகைப்படத்தை முகக்கவசத்துடன் எடுக்கக் கூடாது.

விரல் ரேகை மற்றும் குறு பணப்பரிவர்த்தனை இயந்திரத்தை ஒவ்வொரு பயன்பாட்டிற்கு முன்பும் பின்பும் சுத்திகரிப்பான் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கணினிக்கு ஒன்று வீதம் விரல் ரேகை கருவி வழங்கப்பட்டுள்ள நிலையில், அலுவலர்கள் பயன்பாட்டிற்கு தனிக்கருவியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தனிக்கருவியும் பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பணியாளர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக தங்களது தடுப்பூசிகளை உரிய காலத்தில் அரசின் வழிகாட்டுதலுக்குட்பட்டு செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: