பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

சென்னை: பண மோசடி முறைகேடு வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் அவர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் நான்கு பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் போலீசார் 8 தனிப்படை அமைத்து கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து தற்போது அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் மேல்முறையீட்டு மனு மற்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்த ரிட் மனு ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷாந்த் தவே, ‘‘உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் அவரை கைது செய்யக் கூடாது. அதனையும் மீறி தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேந்திர பாலாஜி பெயரை தவறாக பயன்படுத்தி அதிமுக கட்சியின் உறுப்பினராக விஜய் நல்லதம்பி தான் பணம் பெற்றுள்ளார். இவர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் ஒன்றும் கிடையாது.

இந்த விஜய் நல்லதம்பி தான் ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு சென்று அமைச்சரிடம் பேசி விட்டதாகவும், அந்த வேலைக்காக ரூ.35 லட்சம் பணம் ஆகும் என தெரிவித்துள்ளார். எந்த இடத்திலும் ராஜேந்திர பாலாஜி வேலைக்காக பணம் கேட்டதாகவும், தன்னிடம் அது கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டே கிடையாது. மேலும் கொரோனா நாடு முழுவதும் அதிகரித்து உள்ளதால் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்காலமாக ஒரு மாதமாக முன்ஜாமீன் வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில், எங்களது தரப்பு கூடுதல் ஆவணங்களை நாங்கள் விரிவாக எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தை நாளை (இன்று) நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம். அதனை ஆய்வு செய்துவிட்டு நீதிமன்றம் ஒரு முடிவை மேற்கொள்ளலாம். இதில் ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருக்கும்போது ராஜேந்திர பாலாஜியால் ஒருநாள் கூட இருக்க முடியாதா என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு நாளைக்கு அதாவது புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: