பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி வடசென்னை ரேஷன் கடைகளில் முதல்வர் திடீர் ஆய்வு: நெறிமுறைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுரை

சென்னை: ரேஷன் கடைகளில் சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் ஆய்வு செய்தார். அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை பெற முதல்வர் அறிவுரை வழங்கினார். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையொட்டி, இந்த பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்திடவும், நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடந்த சனிக்கிழமை சென்னை, தீவுத்தீடல் அருகேயுள்ள அன்னை சத்யாநகர் பகுதியில் உள்ள நியாய விலை கடைக்கு நேரில் திடீரென ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ராயபுரம், தொப்பை தெரு மற்றும் புது வண்ணாரப்பேட்டை, டாக்டர் விஜயராகவலு தெரு ஆகிய இடங்களில் உள்ள நியாய விலை கடைகளுக்கு நேரில் சென்று, சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், அங்குள்ள பொதுமக்களிடம், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை பெற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசு வழங்கும் துணிப்பையில் 19 பொருட்கள் சரியாக வைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: