மாநகராட்சி அறிவித்த எண்களில் பதிவு செய்தால் 60 வயதினருக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி: ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை நேரடியாக சென்று செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி மையங்களின் விவரங்களை //covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். அதன்படி, இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 1913, 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். மேலும், 60 வயதை கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களை கடந்த நபர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் அவர்களுக்கும் இல்லங்களிலேயே கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்.

Related Stories: