மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற துணை கமிஷனருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு: 10 பதக்கங்கள் வென்ற மாநகர காவல்துறை

சென்னை: தமிழ்நாடு மாநில காவல் துறைக்கான துப்பாக்கி சுடும் போட்டி-2022, செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழக காவல் துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம் மற்றும் சென்னை மாநகர காவல் கமாண்டோ படையை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சென்னை மாநகரம், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திக்கேயன், காவல் அதிகாரிகளுக்கான பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில், தங்க பதக்கம் வென்றார்.

அதேபோல், தண்டையார்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணசாமி 25 அடி தூர பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் 40 அடி தூர இலக்கு மற்றும் 15 அடி தூர இலக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டிகளில் முறையே வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்றார். புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் கணேஷ் 300 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். ஆயுதப்படை தலைமை காவலர் ஜீவராஜ் 300 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

ஆயுதப்படை தலைமை காவலர் சசிகுமார் 50 அடி தூர இலக்கு கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். ஆயுதப்படை பெண் காலவர் செல்வி, நந்தினி ஆகியோர் 50 அடி தூர இலக்கு கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர். துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்கள் அணியினர் மூன்றாவது இடம் பிடித்து கேடயம் பெற்றனர். அதன்படி, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்ற துணை கமிஷனர் கார்த்திகேயன் உட்பட சென்னை மாநகர போலீசாரை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Related Stories: