சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்கள் மற்றும் தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு 36,889 அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு (Screening Centers) மாநகராட்சியின்  கோவிட் சிறப்பு வாகனங்களின் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பரிசோதனைகளுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் (Tele-Counseling Centers) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டடத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தற்பொழுது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசி அழைப்பாளர்களால் பின்பற்றப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொலைபேசி அழைப்பாளர்கள் வீட்டுத் தனிமையில் உள்ள நபர்களிடம் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கோவிட் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருக்கிறதா என கேட்டறிந்து 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு அறிகுறிகள் தொடர்ந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், வீட்டில் கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை உள்ளதா எனவும், அவர்களின் இல்லங்களுக்கு கோவிட் தன்னார்வலர்கள் வருகை தருகிறார்களா எனவும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் குறித்து கேட்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா எனவும் கேட்டறியப்பட்டு அதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்து, அவசர நிலை ஏற்பட்டால் மாநகராட்சியின் கோவிட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. மண்டலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களில் 19 மருத்துவர்கள் மற்றும் 129 தொலைபேசி அழைப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொற்று பாதித்த நபர்களில் நாளொன்றிற்கு குறைந்தது 100 நபர்களுக்கு தொலைபேசியில் அழைத்து அவர்களின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தில் ஒரு துணை ஆட்சியர், 2 மருத்துவர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிய 45 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  இந்த ஆலோசனை மையத்தில் கோவிட் தொற்று தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. 04.01.2022 முதல் 09.01.2022 வரை தலைமையிடம் மற்றும் மண்டல தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து கோவிட் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு 36,889 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: