நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பணியினை நேரில் ஆய்வு செய்தார் தமிழக முதல்வர்

சென்னை: நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பணியினை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு  திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருவதால், இப்பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்விதப் புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்திடவும், நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் இன்று (10.1.2022) சென்னை, இராயபுரம், தொப்பை தெரு மற்றும் புது வண்ணாரப்பேட்டை, டாக்டர் விஜயராகவலு தெரு ஆகிய இடங்களிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று, சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணியினை ஆய்வு செய்தார். பின்னர், அங்குள்ள பொதுமக்களிடம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை பெற்றிட வேண்டுமென்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: