தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாகிறதா?: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா? என்பது குறித்து அரசின் முக்கிய முடிவுகள் இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? என்பது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அந்த துறையின் செயலாளர், அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மளிகைக் கடைகள் உள்ளிட்டவைகள் செயல்படும் நேரத்தை குறைக்கலாமா? பொங்கல் பண்டிகையின் போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள், ஐ.டி. ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்துவது, சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அரசின் முக்கிய முடிவுகள் மாலையில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.          

Related Stories: