அரசியல்வாதிகளை குறிவைக்கும் கொரோனா!: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பாதிப்பு உறுதி..வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்..!!

டெல்லி: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜ்நாத் சிங்கிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், லேசான அறிகுறிகளே உள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள், தன்னை சந்தித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் பல மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 8 லட்சத்தை தாண்டி இருக்கிறது. வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரண்டு அலைகளை காட்டிலும், கொரோனா 3வது அலையில் பெரும்பாலான திரைபிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: