×

ஹரித்துவார் மாநாட்டில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு!: விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!!

டெல்லி: ஹரித்வாரில் நடைபெற்ற மாநாட்டில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகள் வெளியிடப்பட்ட விவகாரத்தை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஹரித்வாரில் கடந்த மாதம் நடைபெற்ற தர்ம சன்சத் என்ற மாநாட்டில் பங்கேற்று பேசியவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்துகளை தெரிவித்தனர். மியான்மரில் நடந்ததை போன்ற இன அழிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், 100 வீரர்கள் கிடைத்தால், 20 லட்சம் பேரை கொன்று குவிக்கலாம் எனவும் பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

மேலும், அவர்களைக் கொல்ல போலீஸ், ராணுவம், இந்துக்கள் என அனைவரும் அணி திரள வேண்டும். வெறும் கத்தி போதாது, பெரிய பெரிய ஆயுதங்கள் வேண்டும் என்பது உள்பட பல சர்ச்சையான கருத்துக்களைக் கூறியிருந்தனர். இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவற்றை வெறும் வெறுப்பு பேச்சாக மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் இவ்விவகாரம் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பிரஷாந்த் பூஷன், பத்திரிகையாளர் குர்பான் அலி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இவ்விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த கருத்துகள் மீது பிரதமர் நரேந்திர மோடி, எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Muslims ,Haridwar ,Supreme Court , Haridwar, Muslims, trial, Supreme Court
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் ஆடுகள் விற்பனை