×

அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும்: இஸ்பாகான் மாநாட்டினை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை பழவந்தாங்கலில் நடைபெற்ற இஸ்பாகான் (ISBACON) அமைப்பின் 14-வது மாநாட்டினை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இஸ்பாகான் 2022 (ISBACON -2022) ஆண்டு விழா, இந்த ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயமாக, எந்த எண்ணத்தோடு இந்த மாநாட்டை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த எண்ணம் நிச்சயமாக நிறைவேற்றப்படும், நிறைவேறும், அதில் எனக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. அதற்கு ஒரு உதாரணத்தை நான் சொல்ல வேண்டுமென்றால், எப்போதும் ஒரு அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், ஒரு நேரத்தை குறிப்பிடுவார்கள். ஒன்று, இரண்டுக்கு விதிவிலக்கு, ஆனால், பெரும்பாலும் ஒரு அரைமணிநேரம், ஒரு மணி நேரம் தாமதமாகத்தான் தொடங்கும். ஆனால், இந்த நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கும் என்று நிகழ்ச்சி நிரலில் போடப்பட்டிருக்கிறது. ஆனால் 10 நிமிடத்திற்கு முன்பே இந்த நிகழ்ச்சி தொடங்கி விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நீங்கள் நிறைவேற்ற இருக்கக்கூடிய, வெற்றிபெற இருக்கக்கூடிய நிலையைப் பொறுத்தவரை, முன்கூட்டியே அது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட மூன்று செயல்திட்டப் பரிந்துரை அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கிறது:

1. தமிழ்நாட்டிற்கான தொழில் காப்பகங்கள் மேம்பாட்டுக்கான செயல்திட்டங்கள்.
2. சவால் மிகுந்த புதிய சூழலில் தொழில் காப்பகங்களுக்கான பரவலாக்கப்பட்ட செயலாக்க மாதிரிகள்.
3. பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புக் கொள்கைகளில் புத்தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் காப்பகங்களை இணைத்தல்.

இவை வெறும் அறிக்கைகளாக மட்டும் இருந்துவிடாமல் குறிப்பிடத்தக்க பலன்களை நடைமுறையில் உருவாக்க வேண்டும்.தமிழ்நாடு என்பது கல்வியிலும் - பொருளாதாரத்திலும் - தொழில் வளர்ச்சியிலும் - பண்பாட்டிலும் - மேன்மை அடைந்த ஒரு மாநிலம்! இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இளைஞர்களின் அறிவு சக்தி ஆகும். தமிழ்நாட்டில் அறிவு சக்தி நிரம்பிய ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அத்தகைய இளைய அறிவு சக்தியை உருவாக்கக் கூடிய அறிவுசார் கல்வி நிறுவனங்களும் இங்குதான் அதிகம்.

* இந்தியாவில் இருக்கும் மிகமுக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டைச் சார்ந்தவை என்று அண்மைக்கால புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
* தமிழ்நாடு தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முனைவின் அடிப்படைகளில் தேவையான தகுதிகளுடன் முன்னிலையில் உள்ள மாநிலம்.
* இந்த வரிசையில் புத்தாக்க மற்றும் புத்தொழில் முயற்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய தொய்வு நிலையை மாற்றி, மிக விரைவில் தமிழ்நாட்டினை உலகின் முன்னணி புத்தொழில் தளமாக மாற்றும் பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.
* TANSIM எனப்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இயக்கம் மூலமாக இதுவரை 29 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக உயர்த்தப்படும் என்ற உறுதியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களைப்போன்ற புத்தொழில் காப்பகங்கள் மூலமாகவே இத்தகைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில் காப்பகங்களை உலகத்தரத்துக்கு மேம்படுத்தவும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு இத்தகைய புத்தொழில் காப்பகங்கள் மற்றும் புத்தொழில் பூங்காக்களையும் உருவாக்குவதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

* தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டுமே ஏறத்தாழ 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 60 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
* அதேபோல் விண்வெளித்துறை, மின் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நிறுவனங்களையும் இங்கு உருவாக்கி உங்கள் கவனத்தை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளோம்.
* உயர் வருவாய் உள்ள தனிநபர் முதலீட்டாளர்கள் சென்னையில் மட்டுமல்லாது, மாநிலத்தின் இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களிலும் தன்னார்வ அமைப்பாக உருவாகி சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் நாம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கிறோம்.
* வரும் நாட்களில் தமிழ்நாடு புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாக உருவெடுக்கும்.

நம்முடைய எண்ணங்கள், சிந்தனைகள், நோக்கங்கள், திட்டமிடுதல்கள் இப்போது இருப்பதை விட மேலும் மேலும் விரிவடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. கடந்த காலப் பெருமைகள் - நிகழ்கால வளர்ச்சிகளை மட்டுமே சொல்லி நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. எதிர்காலத்தை நோக்கிய உலக நாடுகளின் பயணம் எப்படி அமைந்துள்ளது என்பதை இப்போதே அறிந்தும் புரிந்தும் செயல்பட வேண்டும். வழக்கமான - குறிப்பிட்ட சில தொழில்களிலேயே நமது வளர்ச்சி அடங்கி இருக்கிறது. அதனை நான் குறை சொல்லவில்லை. அதே நேரத்தில் புதிய தொழில்களை நோக்கியும் நமது எண்ணங்கள் செல்ல வேண்டும். உலகெங்கும் நான்காம் தொழிற்புரட்சி தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence); வேறு பல புதிய உற்பத்தி முறைகளும் எல்லாத்துறைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றன.

* தானியங்கி வாகனங்கள்,
* தொலைவழி மருத்துவம்,
* முப்பரிமாண அச்சு,
* மரபணுப் புரட்சி,
* மெய்நிகர் நுட்பங்கள் என தொழில்நுட்பவியல் விரிந்து பரவி விட்டது.

பெருந்தொற்றுச் சூழலில், தொழில் நிறுவனங்கள் இயங்கும் முறையே மாறிப்போயிருக்கிறது. இத்தகைய சூழலில், தொழில் - தொழில் நிறுவனங்கள் - பொதுமக்களுக்கான சேவை ஆகியவற்றின் தன்மை மாறுகிறது. அந்த வகையில் தொழிலதிபர்கள் தங்களது சிந்தனைகளையும் கூர்மைப்படுத்தியாக வேண்டும். தொழில்நுட்பம்தான் உலகின் போக்கை தீர்மானிக்கும் மிக முக்கியமான சக்தியாக இருக்கிறது என்பதை 21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் என்ற புத்தகத்தில் யுவால் நோவா ஹராரி சொல்லி இருக்கிறார். நாம் உருவாக்கி வைத்துள்ள உலகத்தை நாம் புரிந்து வைத்திருக்கிறோமா என்பதுதான் அவர் எழுப்பும் கேள்வி. இது ஏதோ தத்துவ, அரசியல் கேள்வி மட்டுமல்ல. அனைத்துத் தரப்பினரும் சிந்தித்து செயல்பட வேண்டிய கேள்வியாக அமைந்திருக்கிறது. இத்தகைய புதிய சூழலில் இயங்க உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய மாற்றுச்சிந்தனை நிரம்பிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

பெரிய நிறுவனங்களை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சிறு,குறு, நடுத்தரத் தொழில்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் தந்துகொண்டிருக்கிறோம். தொழில் வளர்ச்சியை நிதி அளவுகோளாக மட்டுமில்லாமல் - நீதியின் அளவுகோலாக - சமூகநீதியின் அளவுகோலாக பார்க்கிறோம். புதிய புத்தாக்கத் தொழில்களில் இறங்கிப் பார்க்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டதாக இந்த அரசு இருக்கிறது. புதுயுக சிந்தனைகளுடன் சுதந்தரமாக இயங்கும் புத்தொழில்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படித்தான் கணினித் துறையில் தைரியமாக 1996-ஆம் ஆண்டே திராவிட முன்னேற்றக் கழக அரசு இறங்கியது. தமிழ்நாட்டில் கம்யூட்டர் புரட்சியையே முத்தமிழறிஞர் கலைஞர் தான் உருவாக்கினார். இன்றைக்கு இருக்கும் டைடல் பார்க் கட்டிடத்துக்கு 25 வயது. கால் நூற்றாண்டுக்கு முன்பே கம்யூட்டர்தான் இளைய சமூகத்துக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் அற்புதமான தொழில் என்பதை உணர்ந்து, இந்தக் கட்டிடத்தை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கித் தந்தார். நமக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மென்பொருள் உருவாக்கித் தந்த காலம் முடிந்துவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருக்கும் பொருட்களை வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனை சாஸ் புரட்சி என்கிறார்கள். இது தான் தி.மு.க.வின் புரட்சி.

சேவைவழி மென்பொருள் துறையில் இன்று சென்னை உலகளாவிய மையமாகவே மாறியிருக்கிறது. அண்மையில் சென்னையில் உருவான இத்துறை சார்ந்த ஒரு நிறுவனம் அமெரிக்காவின் பங்குச்சந்தையில் சாதனை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்டெக் (Fintech), எஜுடெக் (Edutech), மீடியா டெக் (Mediatech), ஹெல்த்டெக் (Healthtech) எனப் பல களங்களில் நமது இளைஞர்கள் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைக்கும் தொழில்நுட்பங்கள் மூலமாக உருவாக்கத் தொடங்கி விட்டார். இந்தச் சாதனையோடு நாம் அமைதியாகிவிடக் கூடாது. அடுத்த சாதனைக்குத் தயாராக வேண்டும் என உங்களை நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ்நாடு 2030-க்குள், அதன் மாநில மொத்த உள் உற்பத்தி மதிப்பை ஒரு டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்தவேண்டும். இது சாத்தியமாக வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும். அவை உள்ளூர் சந்தையிலும் உலகச் சந்தையிலும் வெற்றிபெற வேண்டும். பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தாக வேண்டும். இதுதான் நாம் காண வேண்டிய வளர்ச்சி!

இம்மாநிலத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியாக, சுற்றுச்சூழலைச் சீர்குலைக்காத வளர்ச்சியாக, அறிவை மையப்படுத்திய வளர்ச்சியாக இருக்கவேண்டும். அப்போதுதான் வளர்ச்சி என்பதன் பொருள் முழுமை பெறும். இந்தப் புதிய விதமான வளர்ச்சியைப் பெற புதிய சூழல்களை நாம் உருவாக்கவேண்டும். புதிய தொழில் திறனாளர்கள் உருவாக வேண்டும். புதிய தொழில் முனைவோர் உருவாகி அவர்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்றாக வேண்டும். இவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலிருந்தும் வரவேண்டும்.

வளர்ச்சிக்கு அடையாளமான, அதே வளர்ச்சிக்கு அடிப்படையான முதன்மை முதலீடு மனிதவள முதலீடே. தொழில்முனைவோர்களும் தொழில்திறனாளர்களுமே இந்தச் சூழலை உருவாக்குகிறார்கள். எண்ணங்களே ஏற்றத்தை உருவாக்குகின்றன, மனிதர்களே மாற்றத்தை உருவாக்குகிறார்கள். இதனை அறிந்து தொழில் திறனாளர்களையும் தொழில் முனைவோர்களையும் கண்டறிந்து அவர்களை ஆதரித்து அவர்களை ஊக்கப்படுத்துவதிலே டான்சிம் என்ற எங்கள் புத்தாக்க மற்றும் புத்தொழில் இயக்கத்தின் கடமையாக இருக்கிறது. புதிய நூற்றாண்டின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், புத்தாக்கத்தின் வழியாக புதிய தொழில்கள் உருவாக்கவும், இந்த அரசு நிச்சயமாக துணைநிற்கும் என்று முதல்வர் உரையாற்றினார்.

Tags : Isphagan conference ,Md. KKA Stalin , mk stalin
× RELATED சிறுபான்மையினருக்கு எல்லா வகையான...