×

மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான் சூச்சிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால் 102 ஆண்டுகள் தண்டனைக்கு வாய்ப்பு!!

மியான்மர் :மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான் சூச்சிக்கு 3 வழக்குகளில் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூச்சி அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மியானமர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. அவசர நிலையையும் மியான்மர் ராணுவம் அறிவித்தது.

இதனிடையே வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங்சான் சூச்சி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்காதது
 மூலம் தேசிய பேரிடர் மேலாண் சட்டத்தை மீறியது உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் சில மாதங்களுக்கு முன்னர் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 3 வழக்குகளில் ஆங்சான் சூச்சிக்கு மியான்மர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 76 வயதாகும் நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூச்சிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சூச்சி மீதான 11 புகார்களும் உறுதி செய்யப்பட்டால் 102 ஆண்டுகள் வரை அவர் சிறை தண்டனை பெற வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


Tags : Myanmar ,Aung San Suu Kyi , மியான்மர் ,ஜனநாயக போராளி ,ஆங்சான் சூச்சி
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்