கொரோனா முழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின-தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றனர்

ஊட்டி : கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆட்டோக்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 212 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுபடுத்த இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதலே வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 6 தாலுகாகளிலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களும் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். கிராமப்புறம், ஊட்டி நகரில் உள்ள அனைத்து ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், வாடகை கார்கள், லாரிகள் உள்ளிட்ட ஏதுவும் ஓடவில்லை. ஓரிரு இரு சக்கர வாகனங்கள் மட்டும் ெசன்று வந்தன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊட்டி எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை, மார்க்கெட் சாலை, லோயர் பஜார் சாலை, கலெக்டர் அலுவலக சாலைகள் முற்றிலும் வாகனங்கள் இன்றி காலியாக இருந்தன. ஊட்டி புறநகரில் ஊட்டி - கூடலூர் சாலை, ஊட்டி - மஞ்சூர் சாலை, ஊட்டி - கோத்தகிரி சாலை உள்ளிட்டவைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. ஓரிரு மருந்தகங்கள், ஆவின் பாலகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் சில கடைகள் தவிர அனைத்து மூடப்பட்டிருந்தது.

இரு சக்கர வாகனங்கள், கார்கள் போன்ற வாகனங்களை போலீசார் நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  கொரோனா முழு ஊரடங்கால் மஞ்சூர் பஜார் பகுதியில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின. மஞ்சூர் : நேற்று மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள். அலுவலகங்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டது. வாகன போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளான மருந்துகடைகள் மற்றும் பால், பத்திரிகை விநியோகம் மட்டும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மஞ்சூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் எஸ்ஐ மனோகரன், எஸ்எஸ்ஐ ரத்தினசாமி  மற்றும் போலீசார் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை செய்த பிறகே அனுமதித்தனர். தேவையில்லாமல் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கான தளர்வுகள் காரணமாக மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு தேயிலைதுாள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும் இயக்கப்பட்டது. இதன் காரணமாக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல் தோட்டங்களில் தேயிலை பறிப்பில் ஈடுபட்டனர். கோத்தகிரியில் வெறிச்சோடிய சாலைகள்கோத்தகிரி: கோத்தகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன. நாள்தோறும் 500 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களை சுகாதார துறை, வருவாய் மற்றும் போலீசாரும் இணைந்து கண்காணித்து அபராதம் விதித்தனர். மேலும், அத்தியாவசிய தேவைகள் தவிர தேவையின்றி வெளியில் சுற்றி திறிந்தவர்களை போலீசார் எச்சரித்தும் அபராதம் விதித்தும் திருப்பி அனுப்பினர். கூடலூர்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிறு முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தபட்டுள்ளது.

இதனால் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் பால், மருந்துக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு சில சரக்கு லாரி போக்குவரத்து தவிர மாற்ற  வாகன போக்குவரத்து முழுமையாக முடங்கின.மேலும், சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. விதிமுறை மீறி இயக்கப்பட்ட ஒரு சில வாகனங்களுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர்.

இதேபோல், முக கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கும், சாலையில் நடமாடியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

பந்தலூர்: பந்தலூர் பஜார், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பாட்டவயல், பிதர்காடு, உப்பட்டி, சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.இதனால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோ உள்ளிட்ட எந்தவித தனியார் வாகனங்களும் இயக்கப்படவில்லை. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories: