வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள்-கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடியது. மேலும் முழு ஊரடங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை கலெக்டர், எஸ்பி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி இரவு முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வாகன போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுகிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை கண்காணிக்க 600 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் கிரீன் சர்க்கிள், அண்ணா சாலை, காட்பாடி, பாகாயம், தொரப்பாடி, குடியாத்தம், லத்தேரி, அணைக்கட்டு உள்ளிட்ட மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. ஊரடங்கை மீறி ஊர்சுற்றுவோர் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம் ஆகிய 4 உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. ழுழு ஊரடங்கு காரணமாக 4 உழவர் சந்தைகள் மூடப்பட்டு இருந்தது. வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டி வீதி, மீன் மார்க்கெட் போன்ற அனைத்து கடைகள் மூடப்பட்டு இருந்தது. ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே முழு ஊரடங்கையொட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் தேவையின்றி வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீறி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இன்றி முக்கிய சாலைகளும், பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அவசர தேவைக்கு மட்டுமே ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்று மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து போலீசார் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

அணைக்கட்டு:  தமிழகத்தில் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை போலீசார் கண்டறிந்து அபராதம் விதித்தும் எச்சரித்தும் அனுப்பி வைத்தனர். அதேபோல், அணைக்கட்டு, ஊசூர் பகுதியில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சேக்கனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் லட்சுமணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் உணவு பொட்டலங்களை ஆதரவின்றி தவித்தவர்களுக்கு வழங்கினர்.

பொன்னை: பொன்னை பஸ் நிலையம் அருகே உள்ள கடைகள் அனைத்தும் ஊரடங்கால், மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பொன்னை காவல் நிலைய எஸ்ஐ பிரகாசம், மேல்பாடி எஸ்ஐ கார்த்தி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திருவலம்: திருவலம் பகுதிகளில் ஊரடங்கால், அனைத்து கடைகள் மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், பஸ்களின்றி வெறிச்சோடியது.

ஒடுகத்தூர்:ஒடுகத்தூர் பகுதிகளில் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், குருவராஜபாளையம் கூட்ரோடு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

Related Stories: