×

பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு திட்டம் விரிவாக்கம்.. கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை: சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் இதுவரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகள் போடும் பணியும் மேற்ெகாண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2,071  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 87.35 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-ம் தவணையாக 61.46 சதவீத் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதைப்போன்று சென்னையை பொறுத்த வரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2ம் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று உருமாறி ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் முன்களப்பணியாளர்கள், 2 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள்  பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். மேலும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த  தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும்.

அதன்படி தமிழகத்தில் 35.46 லட்சம் பேர்  தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள் இதில் 9.78 லட்சம் பேர்  முன்களப்பணியாளர்கள், 5.65 லட்சம் பேர் சுகாதாரப்பணியாளர்கள், 20.03 லட்சம்  பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களில்  தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்கள், 2021 ஏப்ரல் 14ம் தேதிக்கு  முன்வரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி  போட்டுக் கொள்ள தகுதியானவர்கள். அதன்படி 4 லட்சம் பேர் இன்று பூஸ்டர்  தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று தொடங்கப்படும் என்று சுகாதாராரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில்  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினை பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் அதிக சிகிச்சை முறைகளுடன் மேலும் 5 ஆண்டுகளுக்கு செயலாக்கம், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் விரிவாக்கம், சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.



Tags : CM ,Stalin , முதல்வர் மு.க.ஸ்டாலின்,பூஸ்டர் டோஸ்
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...