×

சாதனை படைக்க அதீத தைரியம் அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

முதல் ஆண் பெல்லி நடனக் கலைஞர் - ஈஷன் ஹிலால்

“எனக்கு அப்போது 10 வயது இருக்கும். என் அத்தை வீட்டில் நடனமாடிக் கொண்டிருந்தேன். திடீரென அங்கு வந்த என் பாட்டி, என்னைப் பார்த்து பாலியல் தொழிலாளிகளின் நடனத்துடன் என்னை ஒப்பிட்டுப் பேசினார். அன்று எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால் அதில் ஏதோ தவறிருப்பதை மட்டும் உணரமுடிந்தது” என்கிறார் இந்தியாவின் முதல் ஆண் பெல்லி நடனக்கலைஞர் ஈஷன் ஹிலால்.

5 வயது ஈஷன் ஹிலால், டி.வியில் பாலிவுட் பாடல் வரும்போதெல்லாம் சோபாவிலிருந்து எழுந்து, தொலைக்காட்சி முன் நின்று, அதில் வரும் நடிகைகள் போலவே நடனமாட முயல்வார். அப்படி டி.வி பார்த்தே கடினமான கதக் நடனத்தையும் பழகிக்கொண்டார். முதலில் இவரது இந்த புது பழக்கத்தை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனே வரவேற்று ஊக்கமளித்துள்ளனர். ஆனால், வெளியில் நண்பர்களுடன் விளையாட செல்லாமல் வீட்டிலேயே இருந்த ஈஷனைக் கண்டு  அவரது தந்தை ஈஷன் மேல் கோபப்பட்டுள்ளார். அவருக்கு ஈஷன் பெண் பிள்ளைகள் போல் வீட்டில் இருப்பது டி.வியைப் பார்த்து நடனமாடுவது பிடிக்கவேயில்லை.
ஈஷனோ எதையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் கவனத்தை நடனத்தில் செலுத்தியுள்ளார்.

மேலும் அவர் பெண்கள் போல் எல்லாருடனும் மிகவும் மென்மையாக நடந்து கொண்டார். அதுமட்டும் இல்லாமல் அவரது நடை, பாவனைகள் எல்லாம்

பெண்மைக்குரிய நளினத்துடன் மாறத்தொடங்கியது. மென்மையான குணம் பெண்களின் அடையாளம் என்பதால், ஈஷனுக்குள் பெண் குணம் இருப்பதாக அவரின் நண்பர்கள் கேலி செய்ய தொடங்கினர். அவரது குடும்பத்தினரும் அவரின் பழக்கவழக்கத்தை மற்றும் செயல்களை மாற்றும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் அவரின் பெற்றோர் அவரை அடித்து திருத்த பார்த்தனர். தன்னை ஏன் திட்டுகிறார்கள், அடித்தார்கள் என்று ஈஷனுக்கு குழப்பமாகவே இருந்தது. தான் ஏதோ தவறு செய்கிறோம் என்று மட்டும் ஈஷனுக்கு புரிந்தது ஆனால் அது என்ன என்று தெரியவில்லை. அன்பாகவும் பரிவாகவும் இருந்தும் ஏன் தன்னை வெறுக்கிறார்கள் என்று ஈஷன் குழம்பினார்.

மற்றவர்கள் தன்னை ஏற்க வேண்டும் என்றும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் எனச் செய்யப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்தன. இவ்வளவு பிரச்னைகளிலும், இன்று 25 வயதான ஈஷன் இந்தியாவின் முதல் ஆண் பெல்லி டான்ஸர். 2017ல் முதன் முறையாக தொலைக்காட்சியில் நீண்ட ஸ்கர்ட்டுடன் தோன்றி அவர் செய்த பெல்லி டான்ஸ் பெரும் பரபரப்பானது. அதற்குப் பின் ஆயிரக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்துவிட்டார். பெண்கள் எப்படி சில துறைகளில் சாதிக்க அதீத தைரியமும் போராட்டமும் தேவைப்படுகிறதோ, ஆண்களுக்கு அதே போல சில சமயங்களில் அதீத தைரியம் தேவைப்படுகிறது. பெல்லி நடனம் பொதுவாகவே பெண்களுக்குரியதாக கருதப்படுகிறது.

பெண்களை துன்புறுத்தும் ஆணைக்கூட எளிதில் மன்னிக்கும் சமூகம், பெண்கள் செய்யும் வேலையைச் செய்தால் மட்டும் தரம் தாழ்த்தியே பார்க்கிறது. இது போல பல பிற்போக்கான சிந்தனைகளுடனும் மனிதர்களுடனும் போராடித்தான் ஈஷன் இந்த துறையில் சாதித்து இருக்கிறார். ஈஷன் குடும்பத்தை பொறுத்தவரை ஆண்கள் நடனமாடக்கூடாது. மேலும், நல்ல பண்புகளைக் கொண்ட பெண்கள் நடனமாடுவதில்லை என்ற சிந்தனைகள் சூழ்ந்த சமூகத்திலேயே அவர் வளர்ந்திருக்கிறார். வளர வளர, வீடும் சமூகமும் அவரை மேலும் துன்புறுத்தியது. ஆனால் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டாலும், நடனத்தின் மீதான
ஆர்வம் மட்டும் குறையவில்லை.

அதனால் 2008 ஆம் ஆண்டில், டி.வி ரியாலிட்டி ஷோவில் பங்குபெற வேண்டும் என்ற ஆசையில், வீட்டை விட்டே வெளியேறினார். ஆனால் கையில் பணம் இல்லை. தில்லியிலிருந்து நைநிடால் வந்து இறங்கி, ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஆனால் காவல்துறை அவரை கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதற்குப் பின் அவரது வாழ்க்கை மேலும் கொடுமையாகியது. இந்த துன்பத்திலிருந்து தப்பிக்க, நடனத்தை முழுவதுமாக கைவிட முடிவு செய்து, தன் பன்னிரண்டாம் வகுப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் நடனம் ஆடும்போதிருந்த மகிழ்ச்சி, இப்போது அவரிடம் இல்லை என்பதை மட்டும் உணர்ந்த ஈஷனின் தாய், “நீ அந்த கடவுளுக்குப் பயந்து, அவருக்கு மட்டும் பதில் சொன்னால் போதும். வேறு யாருக்கும் பயப்படத் தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்.  

அந்த வார்த்தைகள் தந்த தைரியத்தில் மீண்டும் நடனத்தைத் தொடர்ந்தார். முறையாக கதக் பயின்றார். அச்சமயம் மெஹ்ர் மாலிக் என்ற புகழ் பெற்ற பெல்லி நடனக் கலைஞரின் நிகழ்ச்சியைப் பார்த்து, அதன் மீதான ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. உடனே முறையாக பயிற்சி பெறப் பல ஆசிரியர்களை தொடர்பு கொண்டும், தான் ஒரு ஆண் என்ற காரணத்தால் அவருக்குப் பயிற்சி நிராகரிக்கப்பட்டது. ஆனால் தளர்ந்து போகாமல் யுடியூப் மூலமாகவே ஆன்லைனில்  வீடியோக்கள் மூலம் பெல்லி நடனம் பயின்றார். இதைக் கவனித்த ஈஷனின் தந்தை கடும் கோபத்தில், பெண்களைப் போல ஏன் நடந்துகொள்கிறாய் என நடனம் கற்கத் தடைவிதித்தார். ஆனால் இந்த முறை ஈஷன் பயந்து வீட்டைவிட்டு வெளியேறவும் இல்லை, தன் நடனத்தை நிறுத்தவுமில்லை. தந்தைக்குப் புரியவைக்க நினைத்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

2013 மும்பைக்கு வந்தவர் ஃபேஷன் துறையில் சேர்ந்தார். கல்வி ஒரு பக்கம் யுடியூப்பில்  நடன வகுப்புகளும் மறுபக்கம் என இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். சரியாகக் கல்லூரி முடியும் சமயம், பெரிய அதிசயம் காத்திருந்தது. ஈஷனுக்கு முறையாகப் பெல்லி டான்ஸிங் கற்றுத்தர ஒரு நடனக் கல்லூரி

முன்வந்தது. அதில் சேர்ந்த முதல் நாளே அவர் இழந்த அனைத்தும் திரும்பக் கிடைத்துவிட்டதாக உணர்ந்தார். இன்று ஈஷன் பெல்லி நடனத்தில் புகழ்பெற்ற கலைஞர் மட்டுமல்லாமல் பயிற்சியாளரும் கூட. அவர் வெற்றி அடைந்திருந்தாலும், இன்றும் அவரது குடும்பம், தயக்கத்துடனேயே அவரது புகழைப் பார்க்கிறது. பிடித்த வேலையைத் தினமும் போராட்டங்களுக்கு நடுவே தொடர்ந்து மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார், இந்தியாவின் முதல் ஆண் பெல்லி டான்ஸர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!