×

கொரோனா பாதுகாப்பு விதிமீறிய 5 திருமண மண்டபத்திற்கு ரூ.13,600 அபராதம் விதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5  திருமண மண்டபங்களுக்கு, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.13,600 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில்,  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உட்பட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு  http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், நுழைவாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி வைத்து, அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், மாநகராட்சியின் சார்பில் மண்டல அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6ம் தேதி மற்றும் 7ம் தேதி ஆகிய இரண்டு  நாட்களில் மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 81 நிகழ்ச்சி நடைபெறும் கூடங்கள் ஆய்வு  செய்யப்பட்டு அதில் 5 நிகழ்ச்சி  நடைபெற்ற திருமண மண்டபங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தினால் ரூ.13,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* சென்னையில் முழு ஊரடங்கின் போது விதிமுறை மீறிய 612 பேர் மீது வழக்கு
தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்று சென்னையில் மட்டும் கொரோனா விதிமுறைகளை மீறிய 612 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், முகக்கவசம் அணியாத 2,176 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.4,35,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாத 61 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.30,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றியவர்களிடம் இருந்து பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட 726 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகர காவல் எல்லையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5,971 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 11 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமாக வசூலித்தனர். மேலும், கொரோனா ஊரடங்கை மீறியதாக 318 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 761 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Penalty of Rs.13,600 for 5 wedding halls for corona security violation: Corporation action
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...