×

மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி 11 நாள் பாதயாத்திரையை தொடங்கியது காங்கிரஸ்: தடையை மீறி 25 ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடகாவில் தடையை மீறி காங்கிரஸ் நேற்று பாதயாத்திரையை தொடங்கியது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட, கர்நாடகா அரசு நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், தமிழகத்தின் அனுமதியின்றி இந்த அணையை கட்ட முடியாது என்று கர்நாடகா பாஜ அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்நிலையில், இந்த அணையை கட்டும்படி வலியுறுத்தி, நேற்று முதல் 11 நாட்களுக்கு மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை 165 கி.மீ தூரம் பாதயாத்திரை நடத்தப்படும் என்று, இம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கடந்த மாதம் அறிவித்தார்.

தற்போது, கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், மாநில அரசு இதற்கு தடை விதித்தது. ஆனால், ராம்நகர் மாவட்டம், கனகபுராவிலுள்ள சங்கமத்தில் இருந்து நேற்று காலை தடையை மீறி பாதயாத்திரை தொடங்கியது. மாநில காங்., தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மடாதிபதிகள், கிறிஸ்தவ, முஸ்லிம் மத தலைவர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன்கார்கே உள்ளிட்டோர் யாத்திரையை தொடங்கி வைத்தனர். இதில், கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதனால், தொற்று பரவல் பீதி ஏற்பட்டுள்ளது. நேற்று 15 கிமீ வரை பாதயாத்திரை நடந்தது. இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை வீட்டில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், யாத்திரையை தடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Tags : Congress ,Megha Dadu Dam , Congress begins 11-day march demanding construction of Megha Dadu Dam
× RELATED நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை...