ஆந்திராவில் மசூதி கட்டும் விவகாரத்தில் கலவரம் காவல் நிலையம் மீது தாக்குதல் பாஜ நிர்வாகியின் கார் எரிப்பு: கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு

திருமலை: ஆந்திராவில் மசூதி கட்டுவதில் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் போலீஸ் நிலையத்தின் மீது கற்கள் வீசி தாக்கி, பாஜ நிர்வாகியின் காருக்கு தீ வைத்து எரித்தனர். கலவரக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூரில் நேற்று முன்தினம் மசூதி கட்டுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த ஸ்ரீசைலம் தொகுதி பாஜ கட்சியின் தலைவர் புத்த ஸ்ரீகாந்த்தின் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது குறித்து தகவலறிந்த ஸ்ரீசைலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்ரீகாந்த்தை பாதுகாப்பாக காவல்   நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து,  காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மற்றொரு பிரிவினர், ஸ்ரீகாந்த்தின் காரை கவிழ்த்து காவல் நிலையத்தின் முன்பே தீ வைத்து கொளுத்தினர். மேலும், காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கலவரக்காரர்களை கலைக்க முடியாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி இருபிரிவினரையும் கலைத்தனர். இருப்பினும், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆந்திர மாநில டிஜிபி கவுதம்சவாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமைதியான கர்னூல் மாவட்டத்தில் மதவெறியை தூண்ட சிலர் வேண்டுமென்றே முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆத்மகூர் சம்பவத்திற்கு பிறகு உடனே அப்பகுதிக்கு சென்று நிலைமையை கண்காணிக்க மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளேன். தற்போதைக்கு நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளது. மதவெறியை, மத கலவரத்தை தூண்ட முயன்றவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என கூறியுள்ளார்.

Related Stories: