படகு சவாரியில் பரிதாபம் மலை பிளந்து விழுந்து 6 சுற்றுலா பயணி பலி: வீடியோ காட்சிகள் வைரல்

ரியோ டி ஜெனிரோ. பிரேசில் நாட்டில் மலை பிளந்து ஏரியில் விழுந்ததில் படகில் பயணித்த 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் மினாஸ் கிரெய்ஸ் மாகாணத்தில், ‘பர்னாஸ் ஏரி’ அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பிரபலமான இந்த ஏரியில், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் படகில் வலம் வந்தனர். அப்போது, திடீரென எதிர் பாராதவிதமாக ஏரியை ஒட்டியுள்ள மலையில் பிளவு ஏற்பட்டது. பிரமாண்ட பாறை ஒன்று உடைந்து ஏரியில் இருந்த 2 படகுகளின் மீது விழுந்தது. இதில், படகில் இருந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேரை காணவில்லை. மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில், 12 பேர் ஏரியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது. இந்த படகு விபத்தை மற்றொரு படகில் இருந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். இது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Related Stories: