×

4வது டெஸ்ட் போட்டி போராடி டிரா செய்தது இங்கிலாந்து: ஆஸி. ஏமாற்றம்

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் கடுமையாகப் போராடிய இங்கிலாந்து அணி டிரா செய்தது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்ய, இங்கிலாந்து அணி 294 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. 122 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்து மீண்டும் டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்சில் 137 ரன் விளாசிய உஸ்மான் கவாஜா, 2வது இன்னிங்சில் 101 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, 388 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்திருந்தது.

கிராவ்லி 22 ரன், ஹமீத் 8 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹமீத் 9 ரன், அடுத்து வந்த மலான் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த கிராவ்லி 77 ரன் (100 பந்து, 13 பவுண்டரி) விளாசி கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் - ஸ்டோக்ஸ் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தனர். ரூட் 24 ரன்னில் வெளியேற, ஸ்டோக்ஸ் 60 ரன் (123 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி லயன் சுழலில் ஸ்மித் வசம் பிடிபட்டார். ஜோஸ் பட்லர் (11 ரன்), மார்க் வுட் (0), பேர்ஸ்டோ 41 ரன் (105 பந்து, 3 பவுண்டரி) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. எனினும், ஜாக் லீச் - ஸ்டூவர்ட் பிராடு இணைந்து தோல்வியைத் தவிர்க்க போராடினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்தது.

லீச் 26 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் ஆஸி.க்கு வெற்றி என்ற நிலையில், பிராடு - ஆண்டர்சன் இணைந்து 2 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆட்டத்தை டிரா செய்தனர். பிராடு (8 ரன், 35 பந்து), ஆண்டர்சன் (6 பந்தில் 0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் போலண்ட் 3, கம்மின்ஸ், லயன் தலா 2, கிரீன், ஸ்மித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 2 இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்திய கவாஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 3-0 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹோபர்ட்டில் ஜன.14ம் தேதி தொடங்குகிறது.

Tags : England ,Aussies , 4th Test: England draw with Aussies. Disappointment
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை