×

21ம் தேதி நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: சென்னை பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் 21ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தது. கொரோனா பரவலை ஒத்தி வைக்கும் நோக்கில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், கடந்த செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்த செமஸ்டர் தேர்வுகள், நேரடியாக எழுத்துத் தேர்வு முறையில் நடைபெறும் என உயர் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு ஜனவரி 21ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவம் அல்லாத பிற கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து துணைவேந்தர் கௌரி அனுப்பிய சுற்றறிக்கையில். ‘‘வருகிற 21ம் தேதி நடைபெறவிருந்த அனைத்து பருவத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

அதேபோல் கடந்த ஜன.3ம் தேதி தொடங்கிய செய்முறை (பிராக்டிக்கல்) தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. பருவத்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து புதிய கால அட்டவணை வெளியிடப்படும் ’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்னாட்சி அந்தஸ்துள்ள கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் இந்த மாதத்தில் தேர்வுகள் நடத்த இயலாது எனவும் பிப்ரவரி மாதத்தில் நடத்த முயற்சி செய்யலாம் எனவும் கல்லூரி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.


Tags : University , Postponement of Semester Examinations to be held on 21st: Chennai University Announcement
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...