×

ஞாயிறு ஊரடங்கை முன்னிட்டு சனிக்கிழமை ரூ.218 கோடிக்கு மதுவிற்பனை: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகளில் இரண்டு நாளைக்கு சேர்த்து சனிக்கிழமையான நேற்று முன்தினமே மது பாட்டில்களை வாங்கி குவித்தனர். இதனால், தமிழகம் முழுவதும் சனி அன்று ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றின் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தையும் தாண்டி காணப்படுகிறது. இந்தநிலையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு கடந்த 6ம் தேதி அமலாகியது. மேலும், ஞாயிறு முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனால், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியே  மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. அந்தவகையில், கடந்த சனிக்கிழமை அன்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.217.96 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டலம்- ரூ.50.04 கோடி, திருச்சி மண்டலம்- ரூ.42.59 கோடி, சேலம் மண்டலம்- ரூ.40.85 கோடி, மதுரை மண்டலம்- ரூ.43.20 கோடி, கோவை மண்டலம் - ரூ.41.28 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமான நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.90 முதல் ரூ.100 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறும். ஆனால், முழு ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மதுவிற்பனை இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tasmak , Liquor sales for Rs 218 crore on Saturday ahead of Sunday's curfew: Tasmag officials
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...