×

சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணிகள் வாடகை ஆட்டோ, கார்கள் கிடைக்காமல் அவதி: பல மணிநேரம் கால் வலிக்க காத்திருப்பு

சென்னை: முழு ஊரடங்கை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் வாடகை ஆட்டோ மற்றும் கார்கள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது போக்குவரத்து, வாடகை ஆட்டோக்கள், கார்கள் மற்றும் தனியார் வாகன போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் பால் விநியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் மட்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வர முன்பதிவு செய்த ஏராளமான பயணிகள் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடைந்தனர். அவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்வதற்காக வாடகை  ஆட்டோக்கள் மற்றும் கார்களை கேட்ட போது இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வாகனங்கள் எதுவும் வராது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் ஆட்டோ மற்றும் கார்கள் கிடைக்காமல் தங்களது வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

அப்போது முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளை காண்பித்து போகலாம் என்று கூறினார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் உங்களை இறக்கி விட்டு வரும் போது போலீசார் அபராதம் விதிப்பார்கள் என கூறி வரமறுத்து விட்டனர். இதைப்போன்று எழும்பூர் ரயில் நிலையங்களில் தென் மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகள் ஆட்டோ, கார்கள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு நீண்ட நேரம் காத்திருந்து தங்களுடைய உறவினர்களை வரவழைத்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

Tags : Central Railway Station , Passengers arriving at Central Railway Station suffer from unavailability of rental auto, cars: Waiting for several hours for leg pain
× RELATED கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக...