×

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

சென்னை: தென்னிந்தியப் பகுதியில் நிலவும் குளிர் மற்றும் ஈரப்பதம் உள்ள காற்றின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.  குறிப்பாக தமிழகம் மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் பகுதியில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை மையத்தின் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளபடி தமிழகம் ஆந்திராவில் இன்று முதல் அதிக மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். இதன்படி சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மேற்கண்ட மாவட்டங்கள் தவிர, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி  ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை (15.6 மிமீ முதல் 64.4 மிமீ வரை) பெய்யும் வாய்ப்புள்ளது. ஈரப்பதமான சூழ்நிலைக்கு காரணம் என்னவென்றால், வட இந்திய பகுதியில் பகுதியில்  இருந்தும் கிழக்கு பகுதியில் இருந்தும் வீசும் குளிர்காற்றால்தான் உருவாகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகி மேற்கண்ட பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தெற்கு வங்கக் கடல் பகுதியில் தற்போது ஒரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. இது வடக்கு, வட மேற்கு திசையில் நகரும் போது தமிழகத்தில் மழை பெய்யும்.

சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும், லேசானது முதல் மிதமான மழை இன்றும், நாளையும் பெய்யும். பகல் நேரத்தில் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வரைவெப்பம் நிலவும். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில், வட கிழக்கு பருவமழை விடை பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும்அறிவிக்காமல் உள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 நாட்களில் பெய்த மழையின் காரணமாக இயல்பைவிட கூடுதலாக பெய்துள்ளது. அதாவது 29 மிமீ வரை பெய்துள்ளது. நீண்ட கால வானிலை கணிப்பு படி இது அதிகம். இதே நாளில் ஆந்திராவில் வெறும் 2 மிமீ மழை தான் பெய்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


Tags : Tamil Nadu ,Chennai , It will rain in Tamil Nadu today and tomorrow: Yellow alert for 13 districts including Chennai
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...