டாக்டர் இல்லாமல் பார்த்த பிரசவத்தில் குழந்தை பலி தலைமறைவாக இருந்த நர்சுகள் 3 பேர் கைது

சென்னை: ஊத்துக்கோட்டை தனியார் மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்ததால், அக்குழந்தை இறந்து பிறந்தது. இது தொடர்பாக மருத்துவமனையை சேர்ந்த 3 நர்ஸ்களை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 4ம் தேதி ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த காமேஷ் (35) என்பவர் தனது மனைவி திவ்யா (30) என்பவரை 2வது குழந்தைக்காக பிரசவத்திற்கு சேர்த்தார். அப்போது, டாக்டர் இல்லாமல் நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். சுகபிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்து உள்ளது. ஆனால், அந்த குழந்தை இறந்தநிலையில் பிறந்துள்ளது என்று நர்சுகள் காமேஷிடம் கூறினர்.  

இதையறிந்த, திவ்யாவின் கணவர் காமேஷ், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் 5.9.2020ம் தேதி புகார் கொடுத்தார். இந்த மனு சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வந்ததையடுத்து நேற்று முன்தினம் 8ம் தேதி மீண்டும் விசாரணையை நடத்தினர். பின்னர், டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்த செவிலியர்களான ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த மரியா (50), சீத்தஞ்சேரியை சேர்ந்த சுகன்யா (28), கலவை கிராமத்தை சேர்ந்த ரம்யா (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், மற்றொரு நர்ஸ் அருணா மற்றும் மருத்துவமனை நிர்வாகியான டாக்டர் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Related Stories: