தரமற்ற நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம் உண்பதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட உத்தரவு: பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்கொள்ளும் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகிய 434 உணவு மாதிரிகள் பாகுப்பாய்வு செய்யப்பட்டு 56 உணவு மாதிரிகள் தரமானது எனவும், 301 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது எனவும், 77 உணவு மாதிரிகள் தரம் குறைவானது மற்றும் தப்புக் குறியிடப்பட்டது எனவும் அறிக்கை பெறப்பட்டுள்ளது.   

மேலும், பாதுகாப்பற்றது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 99 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.14,60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தரம் குறைவானது / தப்புக் குறியிடப்பட்டது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது மாவட்ட நீதி வழியில் தீர்ப்பு வழங்கும் அலுவலர் நீதிமன்றத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 54 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.7,49,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை எளிதில் கவரும் நோக்கில் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவை பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. போதிய விழிப்புணர்வு இன்றி இவ்வாறு நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.  எனவே, இவற்றினை தவிர்த்து ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ளலாம். குடல் அப்பளம், வடகம், வத்தல் மற்றும் பிற உணவுப் பொருட்களில் உள்ள தரம் பற்றிய குறைபாடு குறித்து 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் செய்யலாம். மேலும், unavupugar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம்.

Related Stories: