×

ஆணையர் குமரகுருபரன் உத்தரவு கிராம கோயில் பூசாரிகள் நலவாரியம் மூலம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: கிராம கோயில் பூசாரிகள் நலவாரியத்தின் மூலம் நிதி உதவியை பெற விரும்பும் உறுப்பினர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டுமென்று ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரை தலைவர், செயலாளராக கொண்ட கிராம கோயில் பூசாரிகள் நல வாரியம், 2007ல் துவக்கப்பட்டது. இந்த நலவாரியத்தின் கீழ் 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021-2022ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக்  கோரிக்கையின் போது 4.9.2021 அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால்  அறிவிப்பு வெளியிடப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்து ஓய்வு பெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தினை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரம் ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால், இறுதிச் சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தினை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தியும், உறுப்பினர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.15 ஆயிரத்தினை ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தியும் அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை தொடர்பாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து உதவி ஆணையர்களுக்கும்  உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நேர்வில் தற்போது மாவட்ட உதவி ஆணையர்கள் வசம் உள்ள கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து நலத்திட்ட உதவி கோரும் விண்ணப்பங்களையும் 13.1.2022க்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலக வசம் அனுப்பிட மாவட்ட உதவி ஆணையர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் நலத்திட்ட நிதி உதவி கோரும் விண்ணப்பங்களை அனுப்பும் போது அவ்விண்ணப்பங்களை நன்கு பரிசீலித்து தேவையான சான்றுகளை இணைத்து தகுதியான விண்ணப்பங்களை மட்டுமே உதவி ஆணையர்கள் கையொப்பத்துடன் அனுப்பிட வேண்டும். இது சட்டமன்ற பேரவை அறிவிப்பு என்பதால் தனி கவனம் செலுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kumaraguruparan Order Village Temple Priests ,Welfare Board , Commissioner Kumaraguruparan Order Village Temple Priests can apply for financial assistance through the Welfare Board
× RELATED பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனம்