திருமண தடை, ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பூஜை செய்வது போல் நடித்து 87 வயது முதியவர் நூதன கொள்ளை

* 57 ஆண்டாக பலரிடம் கைவரிசை காட்டிய ‘சில்வர் சீனிவாசன்’

* தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

சென்னை: திருமண தடை, ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பூஜை செய்வதுபோல் நடித்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட 87 வயது முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த பம்மல், ஐயப்பா நகர், 3வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (65). இவர், தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அதற்காக பிரபல நாளிதழில் மணமகள் தேவை, என தனது செல்போன் எண்ணுடன் விளம்பரம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் சீனிவாசனின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘எனது மகள் வங்கியில் பணிபுரிந்து வருகிறாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறேன். உங்களது மகனுக்கு மணப்பெண் வேண்டி நீங்கள் நாளிதழில் செய்த விளம்பரத்தை பார்த்தேன். உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து மாப்பிள்ளையை பார்க்கலாமா,’’ என கேட்டுள்ளார்.

அதற்கு சீனிவாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுமார் 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சீனிவாசன் வீட்டிற்கு வந்து, பெண்ணின் தந்தை என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின்னர், ‘‘உங்களது மகனின் ஜாதகத்தை கொடுத்தால், நான் பொருத்தம் பார்க்க வசதியாக இருக்கும்,’’ என கூறியுள்ளார். அதன்படி சீனிவாசன் தனது மகன் ஜாதகத்தை கொடுத்துள்ளார். அதை பார்த்த முதியவர், ‘‘உங்களது மகன் ஜாதகத்திலும், எனது பெண் ஜாதகத்திலும் தோஷம் உள்ளது. எளிய பரிகாரம் செய்தால், தோஷம் நிவர்த்தியாகி விடும். அதன் பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம். எந்த தடையும் இருக்காது,’’ எனக்கூறியுள்ளார்.

மேலும், தனக்கு ஜாதகம் தெரியும் என்பதால், உங்களது வீட்டின் பூஜை அறையிலேயே வைத்து, பரிகார பூஜை செய்கிறேன், எனக்கூறியுள்ளார். இதையடுத்து முதியவர் கேட்ட பூஜை சாமான்கள் அனைத்தையும் சீனிவாசன் குடும்பத்தினர் தயார் செய்து கொடுத்தனர். அப்போது முதியவர், ‘‘பூஜை செய்யும்போது தங்க நகைகள் இல்லாமல் செய்யக்கூடாது. அதனால் உங்களது வீட்டில் உள்ள தங்க நகைகளை எடுத்து வந்து பூஜையில் வைத்துவிடுங்கள்,’’ என முதியவர் கூறியுள்ளார்.  சீனிவாசனும் அவ்வாறே செய்துள்ளார். பரிகாரம் செய்வதாக பூஜை நடத்திய முதியவர், பின்னர் அந்த அறையை மூடிவிட்டு, ‘‘ஒரு மணி நேரத்திற்கு யாரும் பூஜை அறையை திறக்க கூடாது. பூஜையில் வைத்த பூ, எலுமிச்சை பழத்தை கோயிலில் வைத்து தரிசனம் செய்ய வேண்டும். அதனால், நான் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வருகிறேன்,’’ எனக்கூறிவிட்டு முதியவர் சென்றார்.

ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் வராததால், சந்தேகமடைந்த சீனிவாசன் குடும்பத்தினர் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று பார்த்தபோது, முதியவர் அங்கு இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அந்த முதியவர் ஆட்டோவில் ஏறி சென்றதாக கூறினர். பின்னர், வீட்டிற்கு சென்று, பூஜை அறையை திறந்து பார்த்தபோது, பூஜையில் வைத்திருந்த 2 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இதுகுறித்து உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.அதில், கும்பகோணத்தை சேர்ந்த சீனிவாசன் (எ) சில்வர் சீனிவாசன் (87) என்ற பிரபல கொள்ளையன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொள்ளையன் சில்வர் சீனிவாசன் குறித்து போலீசார் கூறியதாவது: சீனிவாசன் தனது 14 வயதில் வேலை தேடி சென்னை வந்துள்ளார். ஆரம்பத்தில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது, உடன் பணிபுரிந்த நபரிடம் ஜாதகம் பார்க்க கற்றுள்ளார். அதன் மூலம் ஜாதகம் பார்த்து காசு பார்த்து வந்துள்ளார். அவ்வாறு இவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டிற்கு ஜாதகம் சென்றபோது, அங்கிருந்த வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளார். கடந்த 1964ல் தான் இவர் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் இவர், போகும் இடமெல்லாம் வெள்ளி பொருட்களை திருடுவதையே வழக்கமாக கொண்டதால் போலீசார் இவரை சில்வர் சீனிவாசன் என்றே அழைத்து வந்தனர்.

பெரும்பாலும் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு சவரன், 2 சவரன் நகைகள் தான் இவரது இலக்காக இருக்கும். இவர், சமஸ்கிருதம் தெரிந்து வைத்து, சரளமாக பேசுவதால் பலரும் இவரை ஜாதகம் தெரிந்தவர் என நம்பியுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு மயிலாப்பூரில் ஒரு வீட்டில் திருடிய வழக்கில் சில்வர் சீனிவாசனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தலைமறைவானார். தற்போது பம்மலில் தனது திருட்டை அரங்கேற்றி தப்பியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். சில்வர் சீனிவாசன் கொள்ளையடிக்க வந்து, தப்பிச் செல்லும் சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர், போகும் இடமெல்லாம் வெள்ளி பொருட்களை திருடுவதையே வழக்கமாக கொண்டதால் போலீசார் இவரை சில்வர் சீனிவாசன் என்றே அழைத்து வந்தனர்.

* டபுள் செஞ்சுரிக்காக காத்திருக்கும் சிறைவாசல்

சில்வர் சீனிவாசன் என்று அழைக்கப்படும் சீனிவாசன் சிறுவயது முதலே திருட தொடங்கி உள்ளார். இவரின் அதிகபட்ச இலக்கே வெள்ளி பொருட்களை திருவதுதான். இதனால் தான் சில்வர் (வெள்ளி) சீனிவாசன் என்று சரித்திர குற்றப்பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுவரை இவர் 199 முறை பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். யாரையும் தாக்காமல் நாக்கு நுனி சமஸ்கிருதம் மற்றும் நைஸ் பேச்சு மூலம் எதிரில் இருப்பவர்களை மயக்குவதில் கில்லாடி. இவர் திருட தொடங்கிய ஆண்டு முதல் இதுவரை தமிழக காவல் துறையில் டிஜிபிக்கள் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால் தற்போது 87 வயது ஆகும் சீனிவாசன் மட்டும் திருட்டு தொழிலில் இருந்து இன்னும் ஓய்வு பெறாமல், புதிதாக காவல் துறையில் சேர்ந்துள்ள கான்ஸ்டபிள் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு சவால் விட்டு வருகிறார். தற்போது சங்கர் நகர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் சீனிவாசன் பிடிப்பட்டு சிறைக்கு சென்றால், 200 முறையாக சிறைக்கு செல்வதாக இருக்கும் என்கின்றனர் போலீசார்.

Related Stories: