×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க 30 கண்காணிப்பு குழுக்கள்: ஆணையர் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முழு ஊரடங்கு காரணமாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து முடக்கத்தால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சியில் இதுவரை 703 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையிலும், கொரோனா சிகிச்சை மையங்களிலும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே உரிய பாதுகாப்புடன் வெளியே வரவேண்டும்.

ஏற்கனவே, தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளில் உள்ளது போல், வணிக நிறுவனங்கள் 50 சதவீத நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும். கொரோனா சிகிச்சையை பொறுத்தவரை லேசான பாதிப்பு உள்ளவர்களை, ட்ரிபிள் சி மையத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். இதனை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தினமும் ஆய்வுசெய்து அறிவுரை வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tambaram Corporation , 30 Monitoring Committees to Prevent Corona Spread in Tambaram Corporation Areas: Commissioner Information
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...