×

ஞாயிறு முழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது: தேவையின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

திருவள்ளூர்: கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கால் மாவட்டத்தில் வாகன போக்குவரத்தின்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று உருமாறி ஒமிக்ரானாக வேகமாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து சேவைகள் தடைசெய்யப்பட்டது. அதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், மார்க்கெட்டுகள், இறைச்சிக்கடைகள், மீன் சந்தைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அத்தியவாசிய தேவைகளான மருந்து கடைகள், பால் கதகள், நாளிதழ் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை செயல்படவும் அனுமதிக்கப்பட்டது.

இதனால் திருவள்ளூர் நகராட்சி பேருந்து நிலையம், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, காக்களூர் - ஆவடி சாலை, தேரடி, பஜார் வீதி, காய்கறி மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் இருந்தது. நகரின் முக்கிய சாலைகளில் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரகாந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகலிங்கம், பத்மஸ்ரீ பபி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் வாகன தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவோர்களின் வாகனங்களை போலீசார் சோதனைக்கு பின் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தேவையின்றி வந்த வாகனங்கள் சாலையில் தடுத்து நிறுத்தி அப்படியே எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

திருத்தணி: திருத்தணி நகரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மருந்து, பால் கடைகள் தவிர மீதமுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும், பொதுபோக்குவரத்து இயக்கப்படாததால் சாலைகளில் வெறிச்சோடி காணப்பட்டது. இதுதவிர திருத்தணி ஏஎஸ்பி சாய்பரணீத் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் நகரத்தில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பணிகள் காரணமாக வந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதித்தனர். சில ஒட்டல்கள் மட்டும் திறந்து பார்சல் சேவை செய்யும் வினியோகம் செய்தனர். மொத்தத்தில் முழு ஊரடங்கால் திருத்தணி நகரம் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் இயங்காமல் வெறிச்சோடி கிடந்தது.

ஊத்துக்கோட்டை: தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழித்தடத்தில் சென்னைக்கு செல்லும் வாகனங்களை ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமார் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் பால், காய்கறி வாகங்கள், ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி விட்டனர். மேலும், ஆந்திராவில் உள்ள தும்பூர் கோனை நீர்வீழ்ச்சி, வரதயபாளையம் நீர்வீழ்ச்சி மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய வாகனங்களான கார், பைக், சுற்றுலா பஸ், வேன் போன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி மீண்டும் திருப்பி விட்டனர். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்ற சரக்கு வாகனங்களை தவிர மற்ற  கனரக வாகனங்களையும், சுற்றுலா வாகனங்களையும் ஊத்துக்கோட்டை தமிழக - ஆந்திர எல்லையில் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதேபோல் பெரியபாளையம், ஆரணி, பென்னலூர்பேட்டை, சீத்தஞ்சேரி, ஆரணி, கன்னிகைபேர், தாமரைப்பாக்கம், பூச்சி அத்திப்பேடு ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

பூந்தமல்லி: பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, நசரத்பேட்டை, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக  காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.‘டாஸ்மாக்’ மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பூந்தமல்லி, வேலப்பன்சாவடி, போரூர், மதுரவாயல் ஆகிய இடங்களில் உள்ள மேம்பாலங்கள் அடைக்கப்பட்டு, சிக்னல்கள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பூந்தமல்லி திருமழிசை கூட்ரோடு, வேலப்பன்சாவடி, போரூர், குமணன்சாவடி உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களின் போக்குவரத்தை கண்காணித்தனர். மருத்துவம், உணவு, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். காரணமின்றி இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை மடக்கி விசாரித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், அவசிய தேவை இல்லாமல் ஊரடங்கிலும் அடங்காமல் பைக்கில் சுற்றித்திரிந்த சிலரது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்தனர்.

Tags : The entire curfew on Sunday was deserted throughout the district: Police sent out warnings to those who wandered outside unnecessarily.
× RELATED தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில்...