×

சாலையோர துரித உணவகங்களில் பயன்படுத்தப்படும் தரமற்ற எண்ணெய், மசாலாக்களால் பொதுமக்களுக்கு கல்லீரல் பாதிப்பு: டாக்டர்கள் எச்சரிக்கை

சென்னை: ஸ்டார் மற்றும் பிரபல ஓட்டல்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யை வாங்கி,மீண்டும் பயன்படுத்தும் சில சாலையோர உணவகங்களால், பொதுமக்களுக்கு வயிறு மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையில் தங்கியுள்ளனர். இவ்வாறு வாடகை வீட்டில் தங்கியுள்ள பலர், சமைக்க வசதியின்றியும், நேரமின்மை காரணமாகவும் துரித உணவகங்கள் மற்றும் ஓட்டல்களை நம்பி உள்ளனர். இவர்களை குறிவைத்து வீதிக்கு வீதி ஓட்டல்கள், துரித உணவகங்கள் பெருக்கெடுத்தள்ளன. அதுமட்டுமின்றி, ஒரே தெருவில் 5 ஓட்டல்கள், 10க்கும் மேற்பட்ட துரித உணவகங்களையும் காண முடிகிறது.

இந்த துரித உணவகங்களில் தொடர்ந்து உணவுகளை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள், அடுத்த சில ஆண்டுகளில் அதன் பக்க விளைவுகளை அனுபவிக்க தொடங்குகின்றனர். பொதுவாக உணவகங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளில் அதை மீறி ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை, பலமுறை பயன்படுத்தப்படுவதால், வயிறு உபாதைகளுக்கு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் உள்பட அனைவரும் இந்த துரித உணவுக்கு அடிமையாகி விட்டதால், அவர்களின் கல்லீரல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. தற்போது சென்னையில் பெண்கள் உட்பட குழந்தைகளுக்கு கூட கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு வருவது பெரிதும் கவலை அடைய வைத்துள்ளது. இதற்கு காரணம் துரித உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மசாலா கலந்த உணவுகள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். உடனடி பாதிப்பு இல்லாததால், பலர் இதை பெரிதுபடுத்துவதில்லை. நமது உடல் மிகவும் மோசமாகி மருத்துவமனையில் சேரும்போதுதான் இதுகுறித்து பொதுமக்கள் சிந்திக்க தொடங்குகின்றனர்.

அதற்கு முன்பு வரை இவர்கள் உடலில் உள்ள உறுப்புக்களை பற்றி சிந்திப்பதே கிடையாது. முக்கியமாக மது, சிகரெட் போன்ற பொருட்களால் தான் உடல்நலம் கெட்டுப் போகிறது என பொதுமக்கள் நினைத்துக் கொண்டு உள்ளனர். அதற்கு இணையாக தரமற்ற எண்ணெய், மசாலா போன்ற பொருட்களும் தற்போது பொதுமக்களின் உயிரை குடிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பெரம்பூரை சேர்ந்த வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பிரச்னை சம்பந்தமாக மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் தற்போது பெண்கள், குழந்தைகள் என பலரும் இந்த பிரச்னையால் மருத்துவமனைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

கல்லீரல் பிரச்னைகள் 6 வகையாக பிரிக்கப்படுகிறது. இதில் 5வது நிலை கல்லீரல் பழுதடைந்து அதை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அடுத்த நிலை கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு காலத்தில் மது அருந்துவதால் மட்டுமே வந்த இப்பிரச்னை, தற்போது தரமற்ற எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களால் சமைக்கப்பட்ட உணவை சாப்பிடும் மக்களுக்கும் வர தொடங்கி உள்ளது. குறிப்பாக துரித உணவகங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் கல்லீரல் அருகே கொழுப்பு அதிகமாக படர்கிறது. சராசரியாக ஒரு மனிதனுக்கு 10% முதல் 20% வரை கொழுப்புகள் இருக்கும். ஆனால் தற்போது லிவர் பரிசோதனை செய்தால் 50 சதவீதத்துக்கு மேல் கல்லீரல் பகுதியில் கொழுப்பு படர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் கல்லீரல் பாதிக்கப்படும்போது அதனுடன் சேர்ந்து இணை நோய்களும் பொதுமக்களை தாக்குகின்றன. சென்னையில் மட்டும் தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். குறைந்தபட்சம் தனியார் மருத்துவமனைகளில் ரூ.50 லட்சம் வரை இதற்காக செலவிட வேண்டி உள்ளது. இதற்கு முழு காரணம் தரமற்ற எண்ணெய் மற்றும் மசாலா வகைகள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து, தரமான உணவுகளை சாப்பிட வேண்டும்,’ என்றார்.

* கடும் தண்டனை அவசியம்
சென்னையில் ஸ்டார் ஓட்டல்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் எண்ணெயை சில புரோக்கர்கள் வாங்கி, சாலையோர துரித உணவகங்களில் குறைந்த விலைக்கு விற்கின்றனர். அதை துரித உணவகங்கள் பலமுறை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதில் தயாரித்த உணவுகளை சாப்பிடும் பொதுமக்களுக்கு கெடுதல் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்று செயல்படும் துரித உணவகங்களுக்கு அபராதம் விதிப்பதை தவிர்த்துவிட்டு, கடுமையான தண்டனைகளை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

* அதிகாரிகள் பற்றாக்குறை
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் போதிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இல்லாததால், சென்னையில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் துரித உணவுகளை கண்காணிப்பது சவாலான காரியம். எனவே வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சென்னையிலுள்ள துரித உணவுகளுக்கு கடிவாளம் போடும் வகையில், உணவு பாதுகாப்பு துறையில் போதிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

* தடை விதிக்கப்படுமா?
சென்னையில் பெரும்பாலான துரித உணவகங்கள் சாலை நடைபாதைகளில் இயங்கி வருகின்றன. இதனை மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் நடைபாதைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் நடைபாதைகளில் மசாலா பொருட்களை கொண்டு சமையல் செய்வதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்க நடைபாதைகளில் துரித உணவகங்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

Tags : Substandard oils and spices used in roadside fast food restaurants can harm the liver: Doctors warn
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...