×

தூத்துக்குடி அருகே சீல் வைக்கப்பட்ட குடோனில் தாது மணலை லாரியில் கடத்த முயற்சி: மூவர் கைது

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே  முள்ளக்காடு பகுதியில் சீல்வைக்கப்பட்ட குடோனில் இருந்த தாது மணலை லாரியில் கடத்த முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு பகுதியில் பிஎம்சி நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள தாது மணலை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதோடு குடோனுக்கும் சீல் ைவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாதுமணலை பேக்குகள் மூலம் நேற்று முன்தினம் இரவு லாரியில் ஏற்றி கடத்த முற்படுவதாக தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் மற்றும் உதவி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் சுகதா ரஹீமாவுக்கு  ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து  அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் முத்தையாபுரம் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது  குடோனில் இருந்து தாது மணலை ஆறுமுகநேரி லாரன்ஸ் இருதயராஜ், புதுக்கோட்டை மாவட்டம், புலியன், நெல்லை மாவட்டம், திசையன்விளை சுந்தர் (24) ஆகியோர் தாதுமணலை ஒரு டன் அளவுக்கு பேக்குகளில் அள்ளி லாரியில் ஏற்றி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீசார், மூவரையும் கைது செய்தனர். மேலும் கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்திய லாரி மற்றும் இரு பைக்குகள், பொக்லைன், போர்க்லிப்ட் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Thoothukudi , Attempt to smuggle ore sand in a lorry at a sealed godown near Thoothukudi: Three arrested
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...